BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 April 2014

காமராஜர் பள்ளிகளை திறந்தார்; திராவிட கட்சிகள் சாராய கடைகளை திறந்தன: ஜி.கே.வாசன்

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.செல்வராஜை ஆதரித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியை எந்த சக்தியாலும் முறியடிக்க முடியாது. வரும் காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் முதல் இயக்கமாக வளரும். காங்கிரஸ் கட்சி தன்மானத்தோடும் தனித் தன்மையோடும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாக்காளர்களை தைரியமாக சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளாக செய்த திட்டங்களின் அடிப்படையிலேயே இன்று தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.

பாஜக மோடியை பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்துள்ளது. மோடி என்பது பெயரா? பொருளா? என்றுகூட தமிழக மக்களுக்கு 6 மாதத்துக்கு முன்பு வரை தெரியாது. அந்த கட்சியினரே அவரை எதிர்க்கும்போது, பதவி ஆசையில் குஜராத்தை விட்டுவிட்டு, வேறெங்கோ போட்டியிட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். மக்கள் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்தால் 6 மாதத்தில் மீண்டும் ஒரு தேர்தல் நடைபெறும்.

காமராஜர் பள்ளிகளை திறந்தார். ஆனால், திராவிடக் கட்சிகள் இரண்டும் கிராமங்கள் தோறும் சாராயக் கடைகளைத் திறக்கின்றன. 47 ஆண்டுகள் எந்த வளர்ச்சியையும் தராமல் அணைகள் கட்டுமிடங்களில் எல்லாம் மனைகளை கட்டிக் கொண்டவர்கள் திராவிடக் கட்சியினர். மின் வசதி, தொழில், கட்டுமான மூலப்பொருள்கள், பஞ்சாலை, விசைத்தறி தொழிற்கூடங்கள் அனைத்தும் இன்று பல பிரச்சினைகளை சந்திப்பதற்கு காரணம் தமிழக அரசுதான் என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

அதிமுக தேர்தலுக்குப் பிறகு, எந்த கட்சியில் சேர்ந்தால் லாபம் கிடைக்கும் என்று யோசிக்கிறது. திமுக 9 வருடம் நம்மிடம் பதவி சுகம் அனுபவித்துவிட்டு, நமக்கே மதச்சார்பின்மையை பாடம் சொல்லிக் கொடுக்கிறது. மூன்றாவது அணியான பாஜக அணி, பதவிக்காக ஒன்று சேர்ந்த சந்தர்ப்பவாத கூட்டணி. நான்காவதாக ஆங்காங்கே தெரியும் கம்யூனிஸ்டுகள், ரஷ்யாவில் மழை பெய்தால், இந்தியாவில் குடைப் பிடிப்ப வர்கள். 2008-ல் மத்திய அரசின் 4-ம் ஆண்டிலிருந்து வெளியேறிய கம்யூனிஸ்டுகளுக்கு அன்று முதல் இறங்கு முகம்தான்.

2004, 2009-ல் இந்தியாவில் மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை காங்கிரஸுக்கே சேரும். தொடர்ந்து மூன்றாவது முறையும் இந்த முயற்சி தொடரும். அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media