BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 April 2014

நான் முதல்வரான பிறகு தமிழகத்தில் அராஜகம் அழிந்து, சட்டத்தின் ஆட்சி அச்சமின்றி நடக்கும் உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்- ஜெயலலிதா

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமையிலும், அதில் 9 ஆண்டுகள் திமுகவின் ஆதரவுடனும் நடந்து வந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் பல சீரழிவுகளை நாட்டில் ஏற்படுத்திவிட்டன. எடுத்துக்காட்டாக, திமுக அமைச்சர் முன்னின்று நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி நாட்டுக்கு இழப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலால் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு, அரசுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று மக்கள் பணம் எத்தனை, எத்தனை வழிகளில் எல்லாம் சில தனி நபர்களின் சொத்துகளாக மாறின என்பதை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் காரணம் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசின் மக்கள் விரோதச் செயல்கள்தான்.

சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தில் இருந்து, பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக சுயலாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டதுவரை எந்தெந்த வகைகளில் முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாட்டின் பொதுச் சொத்தை சூறையாடினர். 10 ஆண்டுகால சீரழிவை இப்போது சரிசெய்யாவிட்டால் நாடு இன்னும் பல தலைமுறைகளுக்கு மீண்டு எழ முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவேதான், இந்தத் தேர்தலை நாட்டின் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தப் போகின்ற தேர்தல் என கூறி வருகிறேன்.

‘யாருடைய சொத்துக்கும் உத்தரவாதமில்லை’ என்ற காட் டாட்சியை திமுக நடத்தியது. நில அபகரிப்பு, இயற்கை வளங்களை சூறையாடுதல், ஊழல் மலிந்த ஆட்சிமுறை, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாகச் சீர்கேடு, பொதுத்துறை நிறுவனங்களை கடனில் தள்ளிய பரிதாபம் என்று தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் சீர்குலைத்த ஆட்சியாக கருணாநிதியின் திமுக ஆட்சி இருந்தது.

நான் முதல்வரான பிறகு தமிழகத்தில் அராஜகம் அழிந்து, சட்டத்தின் ஆட்சி அச்சமின்றி நடக்கும் உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். அதுபோல காங்கிரஸ், திமுகவால் இந்த நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட சீர்கேடுகளைகளைய மத்திய ஆட்சிப் பொறுப்பில் அதிமுக அமர்வது அவசியமாகிறது. இத்தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன்மூலம் மத்திய ஆட்சியில் முக்கிய பங்கினைவகிக்க வேண்டும். எனவே, முழுமையான வெற்றியைப் பெற வேண்டும் என்பதே கட்சியினர் ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கட்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media