பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை, மோகன் என்பவர் காதலித்து, சென்னைக்குக் கடத்திச் சென்று 1994 ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி, இந்த காதலுக்கு வேப்பூரைச் சேர்ந்த பாண்டியன் (35) என்பவர் உதவியிருப்பதாகச் சந்தேகித்து, அவரை அழைத்துச் சென்று விசாரித்தார்.
இந்தநிலையில் பருத்திக்காட்டில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்ட நிலையில் பாண்டியன் சடலம் கிடந்துள்ளது.
இது தொடர்பாக போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், தனது கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொலை செய்து விட்டதாக பாண்டியனின் மனைவி அஞ்சலை, சடலத்தை வாங்க மறுத்து உறவினர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாண்டியன் மரணத்தில் சந்தேகம் உள்ளது என அஞ்சலை அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. பிறகு, சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ போலீஸார், பாண்டியன் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அப்போது காவல் ஆய்வாளராக இருந்த கஸ்தூரி காந்தி (தற்போது மதுரை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையர்) மற்றும் அப்போது பாடாலூர் காவல் நிலையத்தில் காவலராக இருந்த ரவி (தற்போது திருச்சி விமான நிலைய குடியேற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்) ஆகியோரை சென்னையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.