ரயிலில் குண்டு வைத்ததாக 3 பேரை சிபிசிஐடி போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். சந்தேகப்படும் மூன்று பேரில் இருவரின் பெயர், விவரங்கள் தெரிந்தன. குண்டுகள் வெடித்த ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அகமது உசேன், ஜான்சன் என்ற 2 பேர் தட்கல் டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். பெங்களூர் ரயில் நிலையத்தில் கடந்த 29-ம் தேதி காலை தட்கலில் இரண்டு டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
அகமது உசேன் என்ற பெயரில் மேற்குவங்க மாநிலம் மால்டா வரை செல்வதற்கும், ஜான்சன் பெயரில் குவாஹாட்டி வரை செல்வதற்கும் போலியான ஆவணங்களைக் கொடுத்து தட்கல் டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. ஜான்சன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் போன் நம்பர் எதுவும் இல்லை.
அகமது உசேன் பெயரில் எடுக்கப்பட்ட டிக்கெட்டில் செல்போன் நம்பர் குறிப்பிடப் பட்டுள்ளது. அந்த போன் நம்பரை போலீஸார் ஆய்வு செய்தபோது, கடந்த ஒரு மாதமாக அது சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இரண்டு பேர் கொடுத்துள்ள முகவரிகளும் போலியானவை. எனவே இவர்கள் இருவரும் சேர்ந்து ரயிலில் குண்டு வைத்திருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இருவரும் குண்டு வைத்து விட்டு வாலாஜா, காட்பாடி, அரக்கோணம் அல்லது சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள், பெங்களூர் ரயில் நிலையம் மற்றும் முன்பதிவு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9-வது நடைமேடையில் குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றபோது, குண்டுகள் வெடித்த எஸ்-4, எஸ்-5 பெட்டிகளுக்கு அடுத்துள்ள எஸ்-3 பெட்டியில் இருந்து ஒருவர் இறங்கி ஓடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
குண்டுகள் வெடிப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன்பு அவர் முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு இறங்கி ஓடுகிறார். அவரது பெயர் விவரங்கள் இன்னும் தெரியவில்லை. இவருக்கும் குண்டுவெடிப்பில் தொடர்பிருக்கலாம் என்று சிபிசிஐடி போலீஸார் பலமாக நம்புகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் இந்த 3 நபர்கள் மீது சந்தேகப் பார்வை விழுந்துள்ளதால் மொத்த விசாரணையும் இவர் களைச் சுற்றியே தற்போது நடந்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.