பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர்ந்து விட கூடாது என்றும், தற்கொலை போன்ற தீவிரமான முடிவை எடுத்து விடக் கூடாது என்றும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
“10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் யாரும் மனமுடைந்து தற்கொலை என்ற தீவிரமான முடிவை எடுத்திடக் கூடாது. இந்த வாழ்வு நமக்கு கடவுள் கொடுத்த வாழ்வு.
நானும் தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, கல்வி கற்பதற்கான பயணத்தில் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்துள்ளேன். 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, பி.யு.சி., பி.எஸ்.சி., மற்றும் பி.எல். ஆகிய வகுப்புகளில் நானும் தோல்வியடைந்துள்ளேன். அப்போதெல்லாம் ஏராளமான ஏமாற்றங்கள், பல கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன். எனினும் அத்தகைய துயரங்களைக் கண்டு எனது மன உறுதியை நான் இழந்தது இல்லை. ஒருபோதும் எனது நம்பிக்கையை விட்டுக் கொடுத்தது இல்லை.
அதன் காரணமாகவே நீதித் துறையில் மிகவும் கவுரவமான ஒரு பதவிக்கு, அதாவது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்ற மிகவும் கம்பீரமான பதவிக்கு என்னால் உயர முடிந்தது.
உறுதியான நம்பிக்கை, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகிய மந்திரச் சொற்களை மனதில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து உழைத்திட வேண்டும். வாழ்க்கை என்பது மிகவும் உன்னதமானது. நமது வாழ்வு எவ்வாறெல்லாம் அமையப் போகிறது என்பது நமக்கு முன்னரே தெரியாது. அத்தகைய சிறப்பான வாழ்வை முன்னதாகவே அழித்துக் கொள்வது என நாம் முடிவெடுப்பது சரியல்ல.
வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான நிகழ்வுகளுக்காக விலங்குகளோ, பறவைகளோ அல்லது பூச்சிகளோ தற்கொலை செய்து கொள்வதில்லை. ஒவ்வொரு சாதாரண மனிதனாலும் பெரும் சாதனைகளை நிகழ்த்த முடியும்” என்று நீதிபதி கர்ணன் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.