கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மராஜ் பிள்ளைக்கும், சுவர்ணத்தம்மாளுக்கும் திருமணமாகி 26 ஆண்டுகளுக்கு பின்னும் அவர்களுக்கு குழந்தை இல்லை. ஆகவே, இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தர்மராஜ் முடிவெடுத்தார். இதற்கு சுவர்ணத்தம்மாளின் ஒப்புதலைப் பெறுவதற்காக தனது வீடு இருந்த இடத்தை, கடந்த 1965-ம் ஆண்டு அவருக்கு தர்மராஜ் வழங்கினார். அதன்பிறகு வேறொரு பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
தர்மராஜ் இறந்துவிட்டதால், அவர் தனக்கு வழங்கிய வீட்டு சொத்தை கலியபெருமாள் என்பவருக்கு சுவர்ணத்தம்மாள் விற்பனை செய்தார். இதை எதிர்த்து விருத்தாசலம் உரிமையியல் நீதிமன்றத்தில் இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி எஸ்.விமலா தீர்ப்பில் கூறியதாவது, “தனது கணவர் வழங்கிய சொத்தில் முதல் மனைவியான சுவர்ணத்தம்மாளுக்கு முழு உரிமையும் உள்ளது. அவர் அந்த நிலத்தை விற்பனை செய்தது செல்லும்” என்று தீர்ப்பளித்தார். திருமணமான ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. கணவனின் உடல் தகுதிகூட காரணமாக இருக்கலாம். ஆனால் குழந்தையின்மைக்கு மனைவி மட்டுமே காரணம் என்ற மிகவும் தவறான எண்ணம் இங்கு நிலவுகிறது.
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, குழந்தையின்மையை காரணம் காட்டி கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது என்பது மனிதத் தன்மையற்ற செயல். இந்த வழக்கில் 26 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மனைவி இருக்கும்போது, குழந்தை இல்லாததை காரணம் காட்டி கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். மனைவி என்ற தனது ஸ்தானத்தை இன்னொரு பெண்ணுடன் பங்கிட்டுக் கொள்ளும்படி முதல் மனைவி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளார். அந்த நேரத்தில் கணவர் தனது முதல் மனைவிக்கு ஜீவனாம்சமாக சொத்தை வழங்கியுள்ளார்.
அவ்வாறு ஜீவனாம்சமாக வழங்கப்பட்ட சொத்தில் முதல் மனைவிக்கு முழு உரிமையும் உள்ளது. அதை அவர் விற்பனை செய்தது செல்லும். மாறாக அத்தகைய உரிமை எதுவும் முதல் மனைவிக்கு இல்லை என்றும் கூறும் நிலை ஏற்பட்டால், இந்த ஒட்டுமொத்த சமுதாயமும் மின்னணு காலத்திலிருந்து மீண்டும் கற்காலத்துக்கே செல்ல வேண்டியிருக்கும். "
இவ்வாறு நீதிபதி விமலா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.