கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நைஜீரியாவில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 276 சிறுமிகள் கடத்தப்பட்டனர். பின்னர், மே 5-ம் தேதி எட்டு சிறுமிகள் வராபே நகரத்தில் இருந்து ‘போகோ ஹராம்' தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட நைஜீரியப் பள்ளிச் சிறுமிகளை மீட்பதற்கு அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறுகையில், “இது ஒரு சவாலான விஷயம். குழந்தைகள் கடத்தப்பட்டு 25 நாட்கள் ஆகின்றன. எவ்வளவு விரைவாக அவர்களை மீட்க முடியும் என்பதை நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இப்போதே எந்த ஒரு முன் முடிவையும் எங்களால் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எட்டு பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஒன்று நைஜீரியத் தலைநகரான அபுஜாவில் வந்திறங்கியது. இவர்களில் ஏழு பேர் அமெரிக்க ஆப்பிரிக்க படைகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஆவார். சனிக்கிழமை இன்னும் ஏழு பேர் கொண்ட குழு நைஜீரியாவில் களமிறங்க உள்ளது.
இவர்கள் துப்பறிதல், ராணுவ நடவடிக்கைகள், தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை போன்ற எல்லா தளங்களிலும் தொழில்நுட்ப ரீதியாக நைஜீரிய மற்றும் அமெரிக்கப் படைகளுக்கு உதவ இருக்கிறார்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.