BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 8 September 2014

குழந்தைகளின் அறிவு வளர (பகுதி - 1)

போட்டிகள் மிகுந்து வரும் அவசரமான உலகில் போராடி முன்னேறும் வழிகளை தங்கள் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடே சிறு குழந்தைகள் கூட மூட்டையை தூக்கிச் செல்வதை போல புத்தக சுமையை தூக்குகின்ற நிலை. முன்பு ஐந்தாம் வயதில் தான் பள்ளிக்கல்வி தொடங்கியது. அதுவரை பெற்றோரின் தனிப்பட்ட கவனிப்பில் இருந்துகொண்டு அம்மா, அப்பா என சொற்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. தாய் தான் ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக இருந்தார். இன்று பிறந்த சில மாதங்களிலே கல்வி நிலையங்களில் முன்பதிவு. மூன்றாம் வயதில் பாலர் பள்ளி வகுப்பு. நான்காம் வயதில் எல்.கே.ஜி எனப்படும் மழலையர் கீழ்வகுப்பு. ஐந்தாம் வயதில் யு.கே.ஜி எனப்படும் மழலையர் மேல்வகுப்பு. இவற்றிலிருந்து பயிற்சி பெறாவிட்டால், ஒன்றாம் வகுப்பில் இடமில்லை என்று சொல்லுமளவுக்கு இன்றைய காலம் மாறிவிட்டது. தொட்டிலில் தாலாட்டப்பட்டு தாய் வழிக்கல்வி ஊட்டப்பட வேண்டிய வயதில், நான்கு சுவருக்குள் அடைக்கப்பட்டு, தனிப்பட்ட கவனம் செலுத்தப்படாமல், பத்தோடு பதினொன்றாய் வெளிநாட்டு மொழி கற்பிக்கப்படும் நிலை தொடர்கிறது.

பாலர் பள்ளி வகுப்புக்கு செல்லும்போதே தனது குழந்தை படிப்பில் முதல் இடம் பெற வேண்டும் என்ற ஆசையும் ஏக்கமும் அடையும் பெற்றோர், தங்கள் குழந்தைகள் பேசி பழகுவதற்கு முன்னரே வண்ணப்படங்கள், அறிவை வளர்க்கும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் பல பயிற்சிகள் அளிக்கின்றனர். இதுபோல தங்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் கையாளும் முறைகளில் ஒன்று தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க பழக்கப்படுத்துவது. அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் குழந்தைகள் பேச பழகுவதோடு, அறிவுக்கூர்மையும் பெறுவர் என்று பலர் எண்ணுகின்றனர். புற்றீசல்போல் புதிதாக முளைத்துவரும் தொலைக்காட்சிகள் குழந்தைகளுக்கு தொல்லைக்காட்சிகளாக மாறிவருவது ஒருபுறம். அதிலும் குறிப்பாக கல்வி தொலைக்காட்சியையோ, கல்வித் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையோ குழந்தைகள் பார்ப்பதால் அறிவுக்கூர்மை அடைவர் என்ற அசையாத நம்பிக்கை பெற்றோர் பலரிடம் உள்ளது. இதற்காக குழந்தைகள் பிறந்த சில மாதங்களிலே இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு வசதி செய்துகொடுக்கின்றனர். ஆனால் கல்வி தொலைக்காட்சியை குழந்தைகள் குறிப்பாக பிறந்த முதல் இரண்டு ஆண்டுககால மழலைப் பருவத்தில் பார்ப்பதால் நன்மை கிடைக்குமா என்பது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. தொலைக்காட்சி பார்ப்பதால் அறிவு வளரும் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறான முடிவுகளை இந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரின் மூளை வளர்ச்சிக்கு கல்வி தொலைக்காட்சிகளோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ உதவவில்லை என்று இவ்வாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
                                                                                                                   தொடரும் ..............


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media