2012-13 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 3.39% பொருளாதார வளர்ச்சி மட்டுமே பெற்று இந்தியாவின் கடைசி மாநிலமாக வந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகள்
பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
வறுமைக்கும் பின்தங்கிய தன்மைக்கும் உதாரணமாக காட்டப்படும் பிகார் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பிகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவருகிறது. மற்ற பின்தங்கிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம் 9.89% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், ஒதிஷா 8.09% வளர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட் 7ஆவது இடத்தையும், மேற்குவங்கம் 8 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. அண்டை மாநிலமான கேரளம் 8.24% வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆனால், இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று தமிழக ஆட்சியாளர்களால் பெருமை பேசப்படும் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது.
ஆனால், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திரையரங்கம் வரிசையில், வேறு எந்த வெற்றுத் திட்டத்தைத் தொடங்கலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரப்போவதாகக் கூறித் தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால், நல்ல நிலையில் இருந்த தமிழகப் பொருளாதாரத்தை கடைசி நிலைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா எப்படிப்பட்ட தலைவர்? என்பதை இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி."
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.