ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த மூன்று ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வரும் நிலையிலும், அங்கு போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் கிராம கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களில் வகுப்பறைகள் இயங்கி வருகின்றன. கடந்த 1968ம் ஆண்டு அப்போதைய உணவு, வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.மதியழகனால் தொடங்கப்பட்ட இந்த அரசு தொடக்கப்பள்ளி, 1991ம் ஆண்டு அரசு நடுநிலைப்பள்ளியாகவும், 2005ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது, மாகாண்யம், மலைப்பட்டு, அழகூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300}க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்ட கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
இதனால், பள்ளிக்கு வகுப்பறைகள் அமைப்பதற்கான புதிய கூடுதல் கட்டடங்கள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய வகுப்பறை வசதி இல்லாததால் நூலகக் கட்டடம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களை மாணவர்கள் தற்போது வகுப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் கிராமசபா கூட்டம், ஊராட்சி சம்பந்தப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் வெட்ட வெளியில், வெயிலில் அமர்ந்து பாடம் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிப் பகுதியிலேயே பல ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடங்களை பள்ளிக்கு ஒதுக்க ஊராட்சி நிர்வாகம் தயாராகவே உள்ளது. அவற்றில் கட்டடங்களை கட்டித்தர சில தனிநபர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் மாவட்டக் கல்வி நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் கடந்த பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று வருகின்றனர். போதுமான வகுப்பறைகள் உள்ளிட்ட அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தால் அவர்களின் கல்வித் தரம் உயரும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடத்தை கட்ட மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.