நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, அந்த மாநில முன்னாள் தலைமைச் செயலர் அசோக் குமார் பாசு உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்னிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அப்போது விசாரணை அதிகாரி தெரிவிக்கையில், இந்த வழக்குக்கு தேவைப்படும் ஆதாரங்களை இன்னும் சில தினங்களில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி பராசர், குற்றப்பத்திரிகை வரும் 22ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மது கோடா, பாசு தவிர்த்து, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியார் நிறுவனமான வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட்டின் இயக்குநர் வைபவ் துல்சியா மற்றும் விஜய் ஜோஷி என்பவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் 8 பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐயால் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இந்த ஊழல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஜ்ஹராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால், அந்த நிறுவனம், அதன் இயக்குநர்கள் சஞ்சீவ் குமார், பிரசாந்த், வைபவ், நிஷா, விமல் குமார், நிர்மலா, ஹேமந்த் குமார் அகர்வால், நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், ஜார்க்கண்ட் அரசு உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்தது. இதுதொடர்பாக சிபிஐ முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்காமல் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. எனவே, நீதிமன்றத்தில் சிபிஐ மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.
ஹிண்டால்கோ நிறுவன விவகாரம்: டிச.16-இல் உத்தரவு
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை மீது வரும் 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இதை அறிவித்தார். ஒடிஸா மாநிலம், தலாபிராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை தொழிலபதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்குச் சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பாக குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பாரேக் உள்ளிட்டோர் மீதும் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. ஆனால், பிறகு அவர்களுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.