நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதம் தொடர்பான கைதிகளை விசாரிக்க அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. பயன்படுத்திய வழிமுறைகளில் சில வெறுக்கத்தக்கவை எனவும், அரசால் அனுமதிக்கப்படாதவை எனவும் அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் பிரென்னன் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரிலுள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 2,990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது, சி.ஐ.ஏ. உளவு அமைப்பு கைதிகளிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து, உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மேலவைக் குழு விசாரித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், போலி மரண தண்டனை நிறைவேற்றம், நிர்வாணப்படுத்துதல், தூங்கவிடாமல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விசாரணை முறைகளை கைதிகளிடம் சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
இது, உலக நாடுகளின் கண்டனத்தை அமெரிக்காவுக்குப் பெற்றுத் தந்தது. இந்நிலையில், சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரென்னன் செய்தியாளர்களுக்கு அளித்த தன்னிலை விளக்கத்தில் தெரிவித்ததாவது: சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் "மேம்படுத்தப்பட்ட விசாரணை முறை'களை பயன்படுத்திய பிறகே ஒசாமா பின் லேடனைப் பற்றிய விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விசாரணை முறைகளால்தான் கைதிகளிடமிருந்து விவரங்களைப் பெற முடிந்ததா, அல்லது வேறு வழிமுறைகளிலேயே விவரங்களைப் பெற முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் ஆய்வுக்குரியது. விசாரணை அதிகாரிகள் பற்றாக்குறை: இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ. அமைப்பின் தயார் நிலைக்கும் மீறிய உத்தரவுகள் எங்களுக்கு இடப்பட்டன. விசாரணை மேற்கொள்வதில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில், பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் பணிக்கப்பட்டோம்.எங்களது பல அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் சி.ஐ.ஏ. அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர்.
வெறுக்கத்தக்கவை: இந்தச் சூழலில், கைதிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு சில நேரங்களில் வெறுக்கத்தக்க, அரசால் அனுமதிக்கப்படாத சில வழிமுறைகளை சில அதிகாரிகள் கடைப்பிடித்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் ஜான் பிரென்னன்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.