ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் விராட் கோலி, முரளி விஜய் ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 517/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியா 444 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. சனிக்கிழமை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ததால், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது மிச்செல் ஜான்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், "ரீப்ளே'யில் பந்து அவரது தோள்பட்டையில் பட்டுச் சென்றது தெரியவந்தது.
சிறிது நேரம் தாக்குப்பிடித்த புஜாரா 21 ரன்களில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் விராட் கோலியும், முரளி விஜயும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து முன்னேற, இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர். கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்தார் விராட் கோலி. அவருக்கு முரளி விஜயும் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக 99 ரன்கள் எடுத்திருந்தபோது, நாதன் லியான் பந்தில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து, ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறினார் முரளி விஜய். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே டக் அவுட்டிலும், ரோஹித் ஷர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்து "கிலி' ஏற்படுத்தினர். ரித்திமான் சாஹா 16 ரன்களுடன் திருப்தி அடைந்தார். ஆனாலும், மறுமுனையில் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது எட்டாவது சதத்தை அடித்தார்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி கடைசியாக நாதன் லியான் சுழலில் சிக்கினார். அவர் 175 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 141 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதற்கு பின் வந்த, கரண் ஷர்மா, முகமது ஷமி, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இதனால், 315 ரன்களில் இந்தியா ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாதன் லியான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.