டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில், கண்காணிப்பு கேமரா உதவியால், கொலையாளிகளை கைது செய்ததாக சி.பி.சி.ஐ,டி. ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக வெளிமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
பிப்ரவரி 13ம் தேதி இரவு உமா மகேஸ்வரி தனியாக நடந்து வருவதைப் பார்த்த கட்டிட தொழிலாளர்கள் 5 பேர், அவரை புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உமா மகேஸ்வரி சத்தம் போட்டும் உதவிக்கு யாரும் வர முடியவில்லை. கொலையாளிகள், உமா மகேஸ்வரியின் செல்போன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். கொலையாளிகளில் இருவர், கல்பாக்கம் அருகே ஒரு கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உமா மகேஸ்வரியின் கிரெடிட் கார்டை கொடுத்துள்ளனர். உமா மகேஸ்வரி தனது கிரெடிட் கார்டின் பின்பகுதியில் பின் நம்பரை எழுதி வைத்திருந்தது, அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
இந்தக் கார்டு எண்ணை ஏற்கெனவே கண்காணித்து வந்த சிபிசிஐடி போலீஸார், உடனடியாக கல்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்து, அந்தக் கடைக்கு அனுப்பினர். அவர்கள் சென்று 2 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் உத்தம்(23), ராம் மண்டல்(23) என்பது தெரிந்தது. இவர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் கூட்டாளிகள் 2 பேர் கொல்கத்தா தப்பிச் சென்றது தெரிந்தது. அவர்களைப் பிடிக்க 4 தனிப்படை போலீஸார் கொல்கத்தா விரைந்துள்ளனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.