BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 9 September 2014

வளைகாப்பில் உளவியல் சிந்தனை

பிரசவம் என்பது மறுபிறவி மாதிரி...அதை உடல் வலுவுடனும், மன வலுவுடனும் தாங்க வேண்டும் என்பதற்காகவே நம் இந்திய பாரம்பரியத்தில் எத்தனயோ விஷயங்களைப் பார்த்து பார்த்து செய்து வைத்திருக்கின்றார்கள். அவை ஆச்சரியமானவை மட்டுமல்ல...விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டவை என்பதுதான் இன்னும் அதிசயமானவை என்று சொல்ல வேண்டும்.

மனதுக்கான நல்ல விஷயங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் நிறைய அடங்கியிருக்கின்றன. முக்கியமாக, பிரசவத்துக்கு முன்பு வளைகாப்பு நடத்துகிற விஷயத்தையே சொல்லலாம். வளைகாப்புக்கு நிறைய பெண்கள் கூடி, கர்ப்பவதிக்கு மூத்த சுமங்கலிகள் வளையல் போடுவார்கள். இதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், "எங்களை எல்லாம் பார்...நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம்?! நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்...தைரியமாக  இரு!" என்பதை இங்கு நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சடங்கில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையையும் கவனிக்கலாம். வளையல் இடும் பெண்ணின் கையை கர்ப்பப்பைக்கு ஒப்பிட்டுப் பாருங்கள். கை விரல்களை கூப்பி, வளையல்களை உள்ள செலுத்தும்போது சற்று சுலபமாக இருக்கும். வளையலை மணிக்கட்டுப் பகுதிக்குச் செலுத்தும்போது சற்று கடினமாகி, அந்த வலியைச் சற்றே சற்று பொறுத்துக் கொண்டால்...அடுத்த நிமிடமே கரங்களில் வளையல் ஏறிவிடும். இப்படித்தான் பிரசவமும்!

இந்த வளையல்கள் ஏற்படுத்தும் அதிர்வு ஓசை, கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல தாலாட்டு. நம் தாய் நம்முடன் இருக்கிறாள் என்று குழந்தைக்கு அது கொடுக்கும் பாதுகாப்பு உணர்வு, அழகானது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அந்தக் காலத்தில் வீடு என்பது பெரியதாக இருந்தது. பிரசவத்துக்கு முன்பு அடிக்கடி உறக்கம் கலைந்து, அந்தப் பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியதிருக்கும். இரவு நேரத்தில் கர்ப்பமான பெண் அறையைக் கடந்து, கூடத்தைக் கடந்து, பின்புறமிருக்கும் கழிவறைக்குப் போகும்போது அந்த வளையல் சப்தம் அந்த பெண் எங்கே செல்கிறாள் என்பதை சட்டென்று சுட்டிக்காட்டும். "ஏன்டி, என்னை எழுப்பக்கூடாதா...இரு நானும் வர்றேன்" என்று உதவிக்குச் செல்வார்கள் வீட்டில் இருக்கும் பெண்கள்.

வளையல் போட்ட 'கையோடு' கர்ப்பிணிகள் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் செல்வதிலும் அடங்கி இருக்கின்றன அவர்களின் மனநலம் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள். இந்திய நாட்டில் மட்டுமின்றி, ஆசிய நாடுகளில் எல்லாம் பிரசவம் என்று வந்தாலே அந்தப் பெண் தாய் வீட்டுக்குச் சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது. ஆம்...பிரசவமாகும் பெண்ணின் உடல்நலம் மட்டுமல்ல, மனநலத்தையும் பாதுகாக்கிற பணி, தாய் வீட்டுக்குத்தான் என்று பார்த்துப் பார்த்து இந்த ஏற்பாட்டை செய்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.

நம் அம்மா, அப்பா, கணவர், சொந்தங்கள், மருத்துவர் எல்லாம் நம்மைப் பிரசவம் எனும் அந்த பெருநிகழ்வில் இருந்து பத்திரமாக மீட்பார்கள்...' என்ற நம்பிக்கைதானே அன்று அட்டவணைகள் இல்லாமல், செக்கப்புகள் இல்லாமல், மருந்து - மாத்திரைகள் இல்லாமல் எல்லா பிரசவங்களையும் சுகப்பிரசவமாக்கினர் .

அந்த நம்பிக்கையை கர்ப்பிணிகளின் மனதில், அவளைச் சுற்றியுள்ளவர்கள் ஆழமாக விதைக்கலாம். அதையெல்லாம் செய்து பாருங்கள்...இரண்டு, நான்கு, ஆறு...என்று மாதங்கள். அவர்களுக்குத் தெரியாமலே சுகப்பிரசவத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு நம் முனோர்கள் வளைகாப்பு  மூலம் கர்ப்பிணிகளின் உளவியலை நன்கு அறிந்து இந்த நிகழ்வை நடத்தினர் .


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media