பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ரயில் பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ரயில்வே கொள்கைப்படி, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் ரயில் கட்டணம் 4.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 1.4 சதவீதமும் உயர்த்தப்பட்டன. அதன்பிறகு, இம்மாதத்தில் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் மாற்றியமைக்க வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வெளியிடப்பட உள்ளது.
கடந்த 4 மாதங்களில், ரயில்வேயில் எரிபொருள்களுக்கு ஆகும் செலவு 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, இதற்கேற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்றார் அவர். இதே தகவலை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபுவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில்வேயின் சுமைகளில் சிலவற்றை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? எனக் கேட்கிறீர்கள். இதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. ரயில்வே திட்டங்களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதற்கு, ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான நிதி ரயில்வேயிடம் இல்லை.
ரயில்வே பட்ஜெட்டில் தங்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து எம்.பிக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20,000 கோடி ஆகும். இதுபோன்ற காரணங்களுக்காக ரயில்வேயின் சுமைகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் அவர். ரயில்வே துறை அமைச்சராக சுரேஷ் பிரபு பதவியேற்ற பிறகு, நிதி நெருக்கடியில் இருக்கும் ரயில்வேயை லாபகரமானதாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பயணிகள் கட்டணத்தைப் பொருத்தவரை ரூ.26,000 கோடி அளவுக்கு அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், பயணிகளின் வருகையோ கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களுக்கு இடையேயான காலத்தில், பயணிகளின் வருகை, கடந்த ஆண்டில் இதேகால கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 1.43 சதவீதம் குறைவாகும். இதுபோன்ற காரணங்களால், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.