முல்லைப் பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருணாநிதி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்துக்குப் பாதகம் விளைவித்துவிடும் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே புறக்கணிக்கும் செயலாக அமைந்துவிடும். தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல், கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இதுபோன்ற செய்திகள் வரும்போதெல்லாம் பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். தமிழகத்தை பாதிக்கும் இதுபோன்ற பிரச்னைகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விளைவுகள் ஏற்படும். ஜி.ராமகிருஷ்ணன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு அனுமதி வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும். இது தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தி.வேல்முருகன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.