இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர் ஒருவரை அதிபர் ராஜபட்ச நியமித்தார். முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நிகழ்ந்து வந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையில் அதிபரின் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க, ஏற்கெனவே வெளிநாட்டவர் 5 பேரைக் கொண்ட குழுவை ராஜபட்ச நியமித்துள்ளார். டெஸ்மண்ட் டிசில்வா, ஜெஃப்ரி நைஸ் (பிரிட்டன்), டேவிட் கிரேன் (அமெரிக்கா), அவதாஷ் கெளசல் (இந்தியா), அகமது பிலால் (பாகிஸ்தான்) ஆகிய ஐவரோடு இப்போது, ஆறாவதாக ஜப்பானைச் சேர்ந்த சட்ட நிபுணர் மோட்டூ நொகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கம்போடியாவில் சிறப்பு நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதியாகச் செயல்பட்டவர். நெதர்லாந்தில் உள்ள வரும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் "பாதிக்கப்பட்டோர் நிவாரண அறக்கட்டளை நிதி' நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது 20,000 பேருக்கு மேல் காணாமல் போனது தொடர்பாக, இலங்கை அதிபர் அமைத்துள்ள சிறப்பு ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. இதில் 5,000-க்கும் மேலானவை, காணாமல் போன ராணுவத்தினர் தொடர்பான புகார்கள். போர் நடைபெற்ற வட இலங்கைப் பகுதிகளான கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் அந்த ஆணையம் பொது விசாரணைகள் மேற்கொண்டது. மேலும், கிழக்கில் மட்டக்களப்பு பகுதியிலும் பொது விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின்போது, காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பு மேலும் விசாரணை மேற்கொள்ளும்.
இறுதிப்போரின்போது மனித உரிமை மீறல்கள் இருந்தது தொடர்பான புகார்களையும் இந்த ஆணையமே விசாரிக்கும் என, அதிபர் ராஜபட்ச கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமானது, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை தனது விசாரணை ஆணையத்தை அமைத்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.