BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 14 September 2013

போதும்! மீண்டும் ஒரு முறை எமது சகோதரிகளை கொல்லாதீர்கள் - புலிகளை கொச்சை படுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ்க்கு கண்டனம் தெரிவிக்கும் பாலன்.



நேற்று புதியதலைமுறை டிவி விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ் பேசும் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளை பாலியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள் என்று அவதூறாக பேசினார்,
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது, இது குறித்து பாலன் அவர்கள் எழுதிய பதிவு உங்களுக்காக இங்கே...

தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்காக குரல் கொடுத்து வரும் சிவகாமி அவர்கனை ஒரு பெண் போராளியாகவே நான் இதுவரை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்டவர் இன்னொரு பெண் போராளிகள் குறித்து அவதூறு பேசினார் என்ற செய்தி என்னை அதிர வைத்திருக்கிறது. அவர் எப்படி இவ்வாறு ஆதாரம் இன்றி அவதூறு பொழிய முடிந்தது?

ஏற்கனவே எமது சகோதரிகள் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தற்போது சிவகாமி அவர்களின் பேச்சு அந்த சகோதரிகளின் நொந்த இதயத்தில் வேல் பாச்சியிருக்கிறது. போதும்! இனியும் அவர்களை வேதனைப் படுத்தாதீர்கள் என கெஞ்சிக் கேட்டக்கொள்கிறேன்.

விடுதலை இயக்கங்களில் புலிகள் இயக்கத்தில் மட்டுமல்ல பெரும்பாலும் எல்லா இயக்கங்களிலும் பெண்கள் இணைத்துக கொள்ளப்பட்டார்கள். அவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்ட பெண்கள் அரசியல் பணிகளில் மட்டுமல்ல ராணுவ தாக்குதலிலும் பங்கு பற்றினார்கள். அவர்கள் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார்கள்.

இவ்வாறு பங்கு பற்றிய பெண்கள் சக போராளியாகவே இயக்கங்களிலும் சமூகத்திலும் மதிக்கப்பட்டார்கள்.
வறிய நிலையில் உள்ள குடும்பத்தில் இருந்து மட்டுமல்ல மிகவும் வசதியான குடும்பங்களில் இருந்தும் பெண்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள்.

முதன் முதலில் நான் அறிந்வரையில் முழு நேர உறுப்பினராக இணைந்து கொண்டவர் ஊர்மிளா என்ற பெண் ஆவார்.
அதன் பின் புஸ்பராணி என்ற பெண் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட செய்தி பத்திரிகைகள் மூலம் பரவியது. இவரை தொடர்ந்து நிர்மலா அக்கா கைது செய்யப்பட்டு பல வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்புறம் அவரை மட்டுநகர் சிறை உடைத்து புலிகள் மீட்டார்கள்.

1983 க்கு பின்பு புளட், ஈபி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் நூற்றுக் கணக்கில் பெண்களை உள்வாங்கினார்கள். ஈ.பி.அர்.எல்.எவ் இன் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் சோபா என்ற பெண் வீர மரணமடைந்தார்.

இவரே முதன் முதலில் மோதலில் பலியான பெண் ஆவார். இதன் பின்னரே புலிகள் இயக்கம் பெண்களை உள்வாங்கி போராட்டத்தில் பங்கு பெற வைத்தது.

எமது விடுதலைப் போராட்டத்தின் மதிப்பு மிக்க பயன்களில் ஒன்றானது இந்த பெண்களின் பங்களிப்பும் அவர்களது சாதனையும். ஏனென்றால் மிகவும் இறுக்கமான யாழ் சமூக கட்டமைப்பை உடைத்து கொண்டு பெண்கள் போராட்டத்தில் பங்கு பற்றியதுடன் அவர்கள் ஆண்களுக்கு நிகராக பெரும் சாதனைகளையும் நிகழ்த்தினார்கள். இவ்வாறான பெண்கள் அனைத்து இயக்கங்களிலும் மிகவும் கட்டுப்பாட்டுடனும் மதிப்புடனும் பேணப்பட்டனர். இதற்கு காரணம் தலைமைகளின் வழிகாட்டல் என்பதிலும் தமிழர்களின் கலாச்சாரம் என்று கூறலாம்.

எந்த தவறுமே நடக்க வில்லை என்று நான் கூறப்போவதில்லை. ஏனெனில் ஒரு சில தவறுகள் நடந்திருக்கின்றன. இது எமது போராட்டத்தில் மட்டுமல்ல நான் அறிந்த பல போராட்ட வரலாறுகளிலும் நடந்திருக்கின்றன. அவற்றை வைத்து அனைத்து பெண்களும் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பது எமது சகோதரிகளை நாங்களே கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

எனவே இது போன்ற பிதற்றல்களை ஒதுக்கி வைத்துவிட்டு தொடர்ந்தும் எமது பெண்களை போராட்டத்தில் இணைத்து கொள்வோம். அவர்கள் மாபெரும் சாதனை நிகழ்த்த வழிகாட்டுவோம்.

சிவகாமி அவர்கள் எமது சகோதரிகளை கேவலப்படுத்தவில்லை. மாறாக அவர் தன்னைத்தானே கேவலப்படுத்தியுள்ளார் என்பதை காலம் விரைவில்
அவருக்கு உணர்த்தும்.

@Balan Tholar


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media