துக்ளக் இதழின் 44வது ஆண்டு விழா, கடந்த புதன்கிழமை அன்று சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.
அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் சோ, நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அப்படி அவர் வருவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறினார்.
ஊழல் என்பது, அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விஷயம் தான். இருந்தாலும், காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள், ஊழலில் டாக்டரேட் பெறும் அளவிற்கு வளர்ந்துவிட்ட கட்சிகள் என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர் ஜெயலலிதாவை பற்றி பேசும் போது, அவரிடம் உள்ள உழைப்பு, நிர்வாகத் திறன் குறித்து சந்தேகமே வேண்டாம். முதல்வராக 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உள்ளது. தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் ஜெயலலிதா என தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியை குறித்து கருத்து தெரிவித்த சோ, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஊழல் செய்ததற்கு ஆதாரமாக 360 பக்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், தற்போது மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கிறார். பதவி ஆசையால் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார், மற்றும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நபர்கள் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளனர் என்று அக்கட்சியையும், அதன் தலைவர் கேஜ்ரிவாலையும் குற்றம் சாட்டினார்.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலத்தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஆடிட்டர் குருமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர்கள் கோபண்ணா, பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் ஒரே மேடையில் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.