BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 28 February 2014

கொழும்புவில் விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்': வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலை - கொந்தளிக்கும் வைகோ


விஜய் டிவி சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்துவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் செயல் என்று மதிமுக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் நியாயம் கிடைக்க தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் நீதிக்கான முழக்கம் எழுந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சிங்கள ராஜபக்சே அரசு வஞ்சகமான வேலையைச் செய்கிறது. கொடியவன் கோத்தபய ராஜபக்சே கூட்டம் பின்னணியில் செய்திருக்கிற ஏற்பாட்டில் இலங்கையில் இசை நிகழ்ச்சி என்ற பெயரில் மார்ச் 1-ஆம் தேதியும், 2-ஆம் தேதியும் உலக நாடுகளை ஏமாற்றும் வேலைக்கு ஏற்பாடாகி உள்ளது.

ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள்.
இந்நிலையில் கொழும்பில் சிங்களவன் நடத்தும் கேளிக்கைக் கொண்டாட்டங்களில் தமிழ்நாட்டு இசைக் கலைஞர்களைப் பங்கேற்க வைப்பதன்மூலம் தாய்த் தமிழகத்தில் சிங்கள அரசுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று வெளி உலகத்திற்குச் சொல்வதற்காகவே இந்த இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததுபோல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.

மார்ச்1 மற்றும் மார்ச் 2 ஆகிய தேதிகளில் சிங்கள அரசின் பின்னணியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிகளில் விஜய் தொலைக்காட்சியில் பாடுகின்ற இசைக்கலைஞர்கள் பங்கேற்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

உலகில் இசைக் கலையை முதலில் தந்தவர்களே தமிழர்கள்தான். இசைக்கலைஞர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு கொண்டிருக்கிறேன். எனவே, அவர்கள் இந்த நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகப் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக மேற் கொள்ள இருக்கும் இசைக் கலைஞர்களின்  இலங்கை பயணத்திற்கு, மாணவ அமைப்பினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media