அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் எளிய மக்கள் கட்சியில் (AAP) இணைகின்றனர்
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சமுதாயத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க சில அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கப் போராளிகள் தேர்தல் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளனர். அணுமின் எதிர்ப்புப் போராட்டத்தை கொள்கைகள் வகுக்கும் தளங்களில் தொடர்ந்து நடத்தவும்; தமிழகமெங்கும் திணிக்கப்படும் மக்கள் விரோத, இயற்கை அழிப்புத் திட்டங்களை தடுத்து நிறுத்தவும்; வருங்காலத் தலைமுறைகளுக்கு தமிழகம் பாதுகாப்பானதாக நீடித்த நிலைத்த வளர்ச்சி கொண்டதாகவும் இருக்கவுமே இந்த முடிவை நாங்கள் எடுக்கிறோம்.
தமிழகமெங்கும் மேற்கொள்ளப்படும் ஆபத்தானத் திட்டங்களை காங்கிரசுக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் ஒருமுகமாக ஆதரிக்கின்றனர். எனவேதான் போராடும் மக்கள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஒரு மாற்றைத் தேடுகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி இந்திய இளைஞர்களின் கவனத்தைக் கவர்ந்து, அரசியல் கனவுகளையும் உருவாக்கிக் கொண்டிருப்பதால், அது ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறது. இக்கட்சியின் தலைவர்களான திரு. அரவிந்த் கேஜ்ரிவால், மூத்த வழக்கறிஞர் திரு. பிரசாந்த் பூஷண், முன்னாள் கப்பற்படை தளபதி அட்மிரல் ராமதாசு, திருமதி. லலிதா ராமதாசு போன்றவர்கள் பலமுறை இடிந்தகரைக்கு வந்திருக்கின்றனர், எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அணுஉலைக்கு ஆதரவான காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சி போன்றவற்றோடு கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கின்றனர். இன்னோரன்ன காரணங்களால் ஆம் ஆத்மி கட்சி இயல்பான தோழமைக் கட்சியாகிறது.
தங்கள் பகுதியில் நிறுவப்படும் அணுமின் நிலையம் போன்ற ஓர் ஆபத்தான திட்டத்தால் பாதிப்புக்குள்ளாகும் உள்ளூர் மக்கள்தான் அவற்றை நிறுவுவதில் இறுதி முடிவு எடுக்க முடியும் என்று ஆம் ஆத்மி கட்சி ஒரு தெளிவான நிலையை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு அணுசக்தி வேண்டுமா, வேண்டாமா எனும் கேள்விக்கு பரந்துபட்ட மக்கள் விவாதம் நடத்தி தக்க நேரத்தில் முடிவெடுக்க ஆம் ஆத்மி கட்சி உறுதியளிக்கிறது.
“ஆம் ஆத்மி கட்சி” என்றப் பெயரைக் கொண்டிருந்தாலும், கட்சித் தலைமை தமிழ் மக்களுக்கு ஏற்றவகையில் தமிழ்ப் பெயரை பயன்படுத்த எங்களுக்கு அனுமதியளிக்கிறது. எனவே மீனவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், தலித் மக்கள், சிறுபான்மையோர் உள்ளிட்ட எளிய மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் வகையில் “எளிய மக்கள் கட்சி (AAP)” என்ற பெயரை பயன்படுத்தவிருக்கிறோம். சமூகத்தில் பலவீனப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர் போன்றோரின் நலன்களையும் “எளிய மக்கள் கட்சி (AAP)” கரிசனத்துடன் பாதுகாக்கும்.
இலங்கை அரசிடமும் இராணுவத்திடமும் சிக்கித் துன்புறும் ஈழத் தமிழரின் இன்னல்களையும், தமிழ் மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களையும் “எளிய மக்கள் கட்சி (AAP)” மிகுந்த சிரத்தையுடனும், அக்கறையுடனும் கண்ணுறுகிறது. இந்திய அரசு இப்பிரச்சினைகள் சம்பந்தமாக இலங்கை அரசையும், சர்வதேச சமூகத்தையும் கண்டிப்பான முறையில் அணுகியிருக்க வேண்டும் என்று “எளிய மக்கள் கட்சி (AAP)” கருதுகிறது.
எங்களுடைய அரசியல் உணர்வுகளும், உணர்திறன்களும், புரிதல்களும், கொள்கைகளும் ஆம் ஆத்மி கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், மதிக்கப்படுவதாலும், இடிந்தகரைப் பகுதி எளிய மக்களாகிய நாங்கள் புதிய தலைவர்களோடும், புதிய கனவுகளோடும், புதிய நம்பிக்கைகளோடும் ஓர் அரசியல் பயணத்தைத் துவக்குகிறோம். “எளிய மக்கள் கட்சி (AAP)” உறுப்பினர்களாக இணைகிறோம்.
இடிந்தகரைக் குழு
“எளிய மக்கள் கட்சி (AAP)”
emkaap.office@gmail.com
9865683735, 9943137915, 9443984091
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.