தமிழக மீனவர்கள் விவகாரம் குறித்து, இலங்கை அரசு ஏமாற்றுவதாக தான் சந்தேகிப்பதாக கூறியிருக்கும் கருணாநிதி, இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"தமிழக மீனவர்களின் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்த்து வைத்து விட்டதாகவும், முதல் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் சுமூகமாக நடைபெற்றதாகவும், இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு முதல்வர் வேண்டுகோள்படி இலங்கை சிறையிலே உள்ள மீனவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்டு விட்டதாகவும் அ.தி.மு.க. அரசிலே உள்ளவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சு வார்த்தைகள் ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று இரு தரப்பினரும் மனமொத்து ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்பட்டு பிரச்சினை முடிவுக்கு வந்தால் போதும் என்ற நம்பிக்கையோடு நாமெல்லாம் காத்திருந்தோம்.
ஆனால் 25ஆம் தேதியன்று இந்திய - இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்பே, அதனை திசைதிருப்பி குழப்புவதைப் போல அதிர்ச்சியூட்டக் கூடிய நிகழ்வு ஒன்று இலங்கைக் கடற்படையினரால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.
இன்றையதினம் வந்துள்ள செய்திப்படி ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் இருந்து நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து முதலில் அங்கிருந்து சென்று விடுமாறு எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.
தொடர்ந்து கடலில் வீசப்பட்ட வலைகள் மற்றும் மீன்களுடன் புறப்படத் தயாரான போது, ரோந்து கப்பல்களில் இருந்த இலங்கைக் கடற்படையினர் திடீரென்று தமிழக மீனவர்களின் படகுகளில் இறங்கி, படகுகளில் இருந்த வலைகளை அறுத்தெறிந் திருக்கிறார்கள். ஐந்து படகுகளை சிறை பிடித்திருக்கிறார்கள். அவற்றில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் நேற்றையதினம் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பகுதிகளில் 12 படகுகளுடன் 50 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்வுகள் இலங்கை அரசின் ஒப்புதலின்றி நடந்திருக்க முடியாது. உண்மையில் இலங்கை அரசு இந்தப் பிரச்சினையில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று கருதுமேயானால் இப்படிப்பட்ட செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை.
எனவே இந்திய அரசையும், தமிழக அரசையும், தமிழக மீனவர்களையும் ஏமாற்றுகின்ற முயற்சியிலே இலங்கை அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் தான் ஏற்படுகிறது. பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இப்படிப்பட்ட செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுவதும், அதுகுறித்து இந்திய அரசு எவ்விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதும் மிகுந்த கண்டனத்திற்கு உரியதாகும்."
இவ்வாறு கருணாநிதி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.