BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 19 April 2014

ஜெயலலிதா, அவர் கொடுத்த 177 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில். 150-ஐ நிறைவேற்றிவிட்டார்- சரத்குமார்

தென்காசி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வசந்தி முருகேசனை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் தலைவரும், தென்காசி தொகுதி எம். எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது:

ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்த போது, இந்திய ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நாட்டில் தீவிரவாதம் கை தூக்க காங்கிரஸ் அரசு காரணமாகிவிட்டது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் பல்வேறு பாராளுமன்ற தொகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் எழுச்சியாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட தயாராகிவிட்டனர்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த 33 மாத ஆட்சியில், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டு உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது 177 வாக்குறுதிகளை அவர் கொடுத்தார். அதில் 150 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அதுமட்டும் இல்லாமல், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத சலுகைகளையும் வழங்கி இருக்கிறார்.

மத்திய அரசில் 14 ஆண்டுகள் தொடர்ந்து தி.மு.க. அங்கம் வகித்தது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மைகள் செய்தார்கள்? ஈழத் தமிழர்களை படுகொலை செய்யப்பட்டபோது, மத்திய அரசில் இருந்து கொண்டு தி.மு.க. வேடிக்கை பார்த்தது. மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரத்திலும் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று கூறுகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வுக்கு, மத்திய மந்திரிசபை கூடி முடிவு எடுத்த போது, அதில் அங்கம் வகித்த, தி.மு.க. பெட்ரோல் விலை உயர்வை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? மத்திய மந்திரி சபையில் சம்மதம் தெரிவித்துவிட்டு, மாநில அரசை இப்போது குற்றம் சாட்டுகிறார்கள். இதன் மூலம் தி.மு.க.வின் இரட்டை வேடம் புரிகிறதா?.

பா.ஜனதா, பா.ம.க., தே.மு. தி.க., ம.தி.மு.க. கட்சிகள் அமைத்து இருப்பது கொள்கை இல்லாத கூட்டணி. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தின் போது என்ன பேசுகிறார் என்று அவருக்கே தெரியவில்லை. தே.மு.தி.க.வுக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் 29 தொகுதிகளை முதல் அமைச்சர் பெற்றுக் கொடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் கூட்டணி தர்மத்தை மதிக்காமல் வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த், பா.ம.க.வை சாதிக்கட்சி என்று கூறினார். தற்போது, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கிறது.

இவ்வாறு ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. பேசினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media