BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 27 May 2014

ஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 "தமிழ்நாட்டின் மின் நிலைமை குறித்து எனது தலைமையில் இன்று (27.5.2014) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர். விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.

இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும். காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 2 முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.

ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும்.

இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும். இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும். நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்"

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media