வரும் ஜீன் மாதம் 3ம் தேதி அன்று திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்தநாள். அதை சிறப்பாகவும், எழுச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
தமிழ் இனம் காக்க, தமிழ் மொழி காக்க தன்னலம் கருதாது தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு, ஒரு நாளும் ஓய்வின்றி உழைத்து வரும் நம் ஒப்பற்ற தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள், வரும் ஜுன் 3.
இந்த இனிய நாளில் தமிழகமே விழாக்கோலம் பூணுகின்ற வகையில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் நகரங்கள், மாநகரங்கள், கிராமங்கள், குக்கிராமங்கள், வார்டுகள் தோறும் வீதிக்கு வீதி கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்து கழகக் கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பச் செய்வதோடு, கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகளையும் அமைத்து, ஏழை, எளியோர்க்கு அறுசுவை உணவினையும், புத்தாடைகளையும் வழங்கி எழுச்சியோடு கொண்டாடிட வேண்டும்.
ஒரு மாத காலத்திற்கு தலைவரின் சிறப்புக்களை விளக்கி கருத்தரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி போன்றவற்றையும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்து அதன் வாயிலாக மக்கள் நலத் திட்டங்களை வழங்கிட வேண்டும்.
ஆதரவற்றோர் - முதியோர் இல்லங்களில் வசிப்போர்க்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றாற்போல் கிராமப் புறங்களில் இலவச மருத்துவ முகாம்களையும், இரத்ததான முகாம்–கண்தான முகாம் போன்ற சிறப்பு முகாம்களையும் ஆங்காங்கே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அமைத்திட வேண்டும்.
மாணவ, மாணவியர்க்கு பேச்சு, கட்டுரை, கவிதை ஒப்பித்தல், மகளிருக்கான கோலப் போட்டி–இசை நாற்காலி, இளைஞர்களுக்கு கிரிக்கெட், கபடிப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளையும் மாவட்டம் முழுவதும் நடத்திட வேண்டும்.
10 மற்றும் 12–ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களில் தேர்ச்சி பெறும் மாணவச் செல்வங்களுக்கு இக்கூட்டம் மனம் நிறைந்த வாழ்த்துக்களை, பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்; கடந்த ஐந்து ஆண்டுகளில் 3328 மாணவ - மாணவியருக்கு ரூபாய் 1 கோடியே 98 இலட்சத்து 13 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் 6வது ஆண்டாக இந்த ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.