நடிகையும் இயக்குனர் செல்வமணியின் மனைவியுமான ரோஜா, ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார்.
நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை ரோஜா பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ரோஜா திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை கட்சி தொண்டர்கள், அருகில் உள்ள வீட்டுக்குள் தூக்கிச்சென்று படுக்க வைத்தனர். தகவல் அறிந்து, விரைந்து சென்ற மருத்துவ குழுவினர், ரோஜா உடல்நிலையை பரிசோதித்தனர்.
வெயில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக மயங்கி விழுந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அங்கேயே அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அவர் 2 மணி நேரம் ஓய்வு எடுத்தார். அதற்குப்பின் ரோஜா உடல்நலம் தேறினார்.
கட்சி நிர்வாகிகள் கே.ஜே.குமார், சக்கரபாணி செட்டி, அம்முலு ஆகியோர் அவரை ஓய்வு எடுக்குமாறும், பிரச்சாரத்தை மறுநாள் தொடரலாம் என்றும் ஆலோசனை கூறினர். ஆனால் நடிகை ரோஜா அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து அங்கிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று ‘மின்விசிறி’ சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.