இந்த வாரம் ஜீனியர் விகடன் இதழ் காட்டுக்குள் இன்னொரு வீரப்பன் என்று மோட்டா என்ற கத்திரி மலை ஆதி வாசி முதியவர் பற்றி செய்தியினை வெளியிட்டு பரபரப்பு செய்தியாக்கியுள்ளது. பத்திரிக்கைகள் இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் அந்த செய்தியில் உள்ள உண்மைத்தன்மையினை தீர ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டியது அவசியம்.
ஏற்கனவே சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் நூற்றுக்கனக்கான மக்கள் கொல்லப்பட்டும் பலர் பாலியல் மற்றும் வதைக்கும் ஆளான ஒரு பின்புலம் உள்ள வனத்தில் இன்னொரு வீரப்பன் என்ற செய்தி மற்றொரு மனித உரிமை மீறலுக்கே வழிவகுக்கும்.
சிறு குற்ற வழக்குகளில் தொடர்பு கொண்டு காவல் துறைக்கும் வனத்துறைக்கும் பயந்து சட்டத்தின் முன் சித்திரவதியின்றி தன்னை ஒப்படைக்க தயாராக உள்ள மோட்டா என்ற ஆதிவாசி முதியவரை சிலர் தங்களின் விளம்பர ஆசைக்காக பலியாடாக மாற்றியுள்ளனர். அவர்கள் பத்திரிக்கைக்காரர்களை அழைத்து வந்து பேட்டிக்கு ஏற்பாடு செய்த உழைப்பில் நூற்றில் ஒரு பகுதியினை செலவழித்திருந்தால் உள்ளூர் அல்லது வெளியூர் நீதிமன்றத்தில் மோட்டாவை சரண்டர் செய்திருக்கலாம்.
அவரின் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டால் கூட மூன்று வருடங்களில் விடுதலை அடைந்து விட முடியும். அரசின் ( போலீசின்) ரோசத்தை சீண்டியிருக்கவும் தேவையிருந்திருக்காது. இனி இந்த சின்ன பிரச்சனைக்காக அதிரடிப்படை கத்திரி மலையில் தங்களில் அராஜகத்தை ஆரம்பிக்கலாம் அல்லது ஒரு கொடிய குற்றவாளியைப்போல் இந்த சோத்துக்கும் தண்னீருக்கும் வழியின்றி காட்டில் உயிர் வாழ போராடி , பத்திரிக்கையாளர்கள் தன்னை பாதுகாப்பாக போலீசின் அடியின்றி சிறைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று நம்பிய ஆதிவாசி கொல்லப்படலாம்.
பத்திரிக்கைகள் தங்களின் தார்மீக பண்புக்கு எதிராக ஒரு சின்ன செய்தியை பரபரப்பாக மாற்றுவது தவிர்க்கப்படவேண்டும்.தமிழக அரசு கத்திரி மலை மோட்டாவை சட்டத்தின் வழி முறையாக கைது செய்து அவரின் மீதான வழக்கை நீதிமன்றத்தில் நடத்த உள்ளூர் மக்கள் உதவ (பின்னால் அடித்து பொய் வழக்கு போடமாட்டோம் என்ற உத்திரவாத்துடன்) கோரிக்கை வைக்கவேண்டும். மொத்தத்தில் வீரப்பன் என்ற கதை அல்லது தலைப்பு தவிர்க்கப்படவேண்டும்.
இவ்வாறு ச.பாலமுருகன் மாநிலச்செயலர் பி.யு.சி.எல் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.