BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 13 August 2013

வெளிநாட்டு வேலையின் மீது மோகம் கொள்பவர்களுக்கு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சதீஷ் என்ற 28 வயது வாலிபர், டிப்ளமோ இன் மெக்கனிக்கல் இன்ஞினியரிங் படித்திருக்கிறார். உள்நாட்டில் வேலை செய்து பெரிதாக சம்பாரிக்க முடியாது அதனால் சவுதியில் இருக்கும் சித்தப்பா உதவியுடன் அங்கே எதாவது வேலை செய்து சம்பாரிக்கலாம் என முடிவுக்கு வந்தார்.

வீட்டில் இருந்த நகைகளை விற்று, பத்தாததிற்கு கடன் வாங்கி, பெரும் பணம் சம்பாரித்து அழகான மனைவி, சொந்தத்தில் வீடு அருமையான குழந்தைகள் என வாழ்வின் எதிர்காலத்தை கனவுகளாக கண்டுகொண்டே விமானத்தில் ஏறினார்.

அல்ஜூப் நகர் பக்கத்துல சகாகா என்ற இடத்தில் சதீஷின் சித்தப்பா பஞ்சர் கடை வைத்துள்ளார், அவரது ரெகுலர் வாடிக்கையாளரான மெத்தான் என்பவரின் உதவியுடன் சதீஷுக்கு “ஹவுஸ் ட்ரைவர்” என்று விசா வழங்கப்பட்டு இருந்தது, இதற்காக சதீஷ் மெத்தானுக்கு மாதம் 1200 ரூபாய் கொடுத்து வேண்டியிருந்தது, இந்த விசாவை பயன்படுத்தி சதீஷ் வேறு எங்கும் வேலை செய்து கொள்ளலாம் என்பதால் சதீஷும் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிழலின் அருமை வெயிலில் நடக்கும் போது தான் தெரியும் என்பார்கள், சதீஷிற்கு சொந்த மண்ணின் பெருமை அங்கிருக்கும் போது தான் தெரிந்திருக்கிறது, நேரம் காலம் பார்க்காமல், கால் வயிறும், அரை வயிறும் சாப்பிட்டு உழைத்தாலும் மாதம் பத்தாயிரத்திற்கு மேல் அவரால் சேமிக்க முடியவில்லை. அவரை போலவே விவசாய விசாவில் வந்தவர்கள் கிழிந்த கொட்டகையில் ஒட்டகம் மேய்த்து கொண்டு ஒட்டகத்திற்கு வைக்கும் தண்ணிரையே குடித்து கொண்டு வாழும் அவலத்தை கண்ணால் கண்டார்.

ரோட்டில் நடந்து செல்லும் பொழுது அரபிகள் அடிப்பது, ஆடைகளை உருவி அவமானப்படுத்துவது என்று இவர்கள் படாத கஷ்டமில்லை, எதிர்த்து எதேனும் கேள்வி கேட்டுவிட்டால் இஸ்லாத்தை இழிவாக பேசிவிட்டான் என்று பள்ளிவாசல் அழைத்து போய் சவுக்கடி கொடுப்பார்க்கள், இவ்வாறு இலங்கையில் இருந்து பிழைப்புக்காக வந்திருந்த காண்டீபன் என்ற இளைஞரை ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து சவுக்கால் அடித்துள்ளனர், ஒருமுறை அடையாளம் தெரியாத இந்தியர் ஒருவரை காருக்கு பின்னால் வைத்து கட்டி தரதரவென்று ரோட்டில் இழுத்து சென்றுள்ளனர்.

கள்ளநோட்டு கொடுத்து ஏமாற்றி சென்ற உள்ளூர்வாசி ஒருவரை பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த தஞ்சாவூர்காரர் ஒருவர் மறுமுறை அடையாளம் கண்டு, காட்டி கொடுத்துவிட்டார், அவர்களுக்குள் பேசி தீர்த்து கொண்ட அவர்கள் மறுநாள் துப்பாக்கியுடன் வந்து அவரின் தோள் மற்றும் தொடையில் சுட்டு தப்பிவிட்டனர். இவ்வளவு நடந்தும் சகித்து கொண்ட காரணம் கடன் வாங்கி இங்கே வந்திருக்கிறோம், கடனை அடைக்கும் அளவுக்காவது சம்பாரித்து சென்றுவிடலாம் என்று தான் சதீஷை போல் பலரும் அங்கே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்

இரண்டு வருடம் கழித்து சதீஷும், அவரது நண்பர் சிதம்பரமும் சேர்ந்து சகாகா பகுதியிலேயே சொந்தமாக ஒரு பஞ்சர் கடை திறந்துள்ளார்கள். இதை யாரோ மெத்தான்கிட்ட சொல்லிவிட, சொந்தமாக கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாயா, இனி மாதம் மூவாயிரமும், வருடத்திற்கு தனியாக இருபத்தைந்தாயிரமும் கொடுத்தால் தான் விசாவை புதுப்பிக்க உதவுவேன் என்று மிரட்டியுள்ளார். தெரிந்த இந்திய தூதரக அதிகாரிகள் கூட அப்பொழுது இவர்களுக்கு உதவவில்லை வேறு வழியில்லாமல் மாதம் 2000 கொடுத்து விடுகிறோம் என்று தொழிலை ஆரம்பித்தார் சதீஷ்.

சென்ற மாதம் சர்வீஸுக்கு வந்த கார் ஒன்று ரிவர்ஸ் வரும் போது, வேகமாக வந்து இவரது காலில் மோதி பலத்த சேதம் ஏற்பட்டது, அப்பகுதி மருத்துவர்கள் இங்கே போதிய வசதியில்லை என்று கைவிரித்தனர், வசதி இருந்த மருத்துவமனையிலோ வெளிநாட்டவரை சேர்க்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனர், சிகிச்சைக்காக இந்தியா செல்லலாம் என அனுமதி கேட்ட போது, இந்த விபத்திற்காக நஷ்டஈடு எதுவும் கேட்கமாட்டேன், யார் மீதும் வழக்கு தொடர மாட்டேன் என்று எழுதி கையெழுத்து வாங்கி இந்தியா அனுப்பியுள்ளனர்.

நண்பர்களின் உதவியுடன் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸில் வரிசையாக நான்கு டிக்கெட்டுகள் எடுத்து படுத்தவாறே இந்தியா வரை செல்ல ஏற்பாடு ஆயிற்று, துணைக்கு யாருமில்லை. 15 மணிநேரம், எந்த அவசரம் என்றாலும் தானாக எழுந்திரிக்கவோ, துணைக்கு தோள் கொடுக்கவோ யாருமில்லை, பல இன்னல்களுக்கு மத்தியில் எப்படியேனும் காலை காப்பாற்றி விடலாம் என்று இந்தியா வந்து சேர்ந்தார் சதீஷ்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆன சதிஷின் காலை மீண்டும் குணப்படுத்த முடியாது, ரெண்டுநாளுக்கு முன்னர் வந்திருந்தால் சரி செய்திருப்போம் என கைவிரித்து விட்டனர் டாக்டர்கள், மருத்துவமனை செலவு, சவுதியில் இருந்து இந்தியா வந்த செலவு என சேர்த்த அத்தனையையும் இழந்து இன்று ஒன்றுமில்லாமல் ஒரு காலையும் இழந்து நிற்கிறார் சதீஷ். இழப்பீடு கேட்டு வழக்கு தொடர முடியாமல் கையெழுத்து வாங்கிவிட்டனர்.

தனது வாழ்வை மொத்தமாக இழந்து நிற்கும் சதிஷ் வெளிநாட்டு மோகத்தில் திரியும் இளைஞர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான், பிச்சை எடுத்தாலும் உள்நாட்டிலேயே எடுங்கள், வெளிநாட்டில் வேலைன்னு நம்பி போய் ஏமாந்துறாதிங்க என்பது தான் அது.





Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media