‘‘ஆண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், ஒரு பெண் கண வனை இழந்தாலோ, பிரிந்து வாழ்ந்தாலோ இன்னொரு திருமணம் செய்துகொள்ள இந்த ஆணாதிக்க சமுதாயம் அவ்வளவு எளிதில் விடுவதில்லை. இந்த நிலையை மாற்றவேண்டும். கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் சிந்தனை." என்று கூறும் ராஜேந்திரன், இமானுவேல் சேகரன் பேரவையின் பரமக்குடி ஒன்றியச் செயலாளர் ஆவார். இவர் தன் சிந்தனைக்கு ஏற்றார்போல், கணவனை இழந்து நின்ற பெண்ணை மணம் முடித்துள்ளார்.
பரமக்குடியில் 2011ல் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் நடந்த கலவரத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான 6 பேரில் ஒருவர், ஜெயபால். அவர் இறந்தபோது, அவரின் மனைவி காயத்ரி நிறைமாத கர்ப்பிணி, அடுத்த 18-வது நாள் ஆண் குழந்தைக்கு தாயானார். இந்த நிலையில்தான் காயத்ரியை மறுமணம் செய்துகொள்ள முன்வந்திருக்கிறார், ராஜேந்திரன். அவர் விருப்பத்தை காயத்ரியிடம் எடுத்துச் சொல்லி சம்மதம் பெற்ற இமானுவேல் சேகரன் பேரவையினர் இருவருக்கும் கடந்த 16-ம் தேதி பரமக்குடியில் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
இமானுவேல் சேகரன் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தோழர் ஜெயபால் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அந்த பாதிப்புதான் அவரது துணைவியாருக்கு மறுவாழ்வு கொடுக்கும்படி என்னை உந்தியது’’ என்கிறார் ராஜேந்திரன்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.