BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 March 2014

ஊழலுக்கு பெயர்போன அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸிற்கு மாற்று தான் தேசிய ஜனநாயக கூட்டணி


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தனிநபர் வருமானத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.

இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்திடும் வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம் என்ற புதிய புரட்சி முழக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் மாநாட்டை நடத்தினோம்.

தமிழகத்தில் ஊழலுக்கு பெயர்போன அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸிற்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவுதான் தேசிய ஜனநாயக கூட்டணியாகும். இக்கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழ்நாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. பல இயக்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இது மக்கள் கூட்டணி, தமிழகத்தின் முதல் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.

நாட்டில் ஏழை மக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கும் லஞ்சமும், ஊழலும்தான் பெரிதும் காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால் இந்திய நாடு எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு அமைய வேண்டும். அது இந்தியாவை கட்டாயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பாரதீய ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற தேமுதிக மற்றும் தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும்.

அவரவர் சார்ந்துள்ள பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேமுதிகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கழக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் ஆகியோரின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் அரும்பாடுபட வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்கின்ற நமது குறிக்கோளோடு, சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு, பகலென பாராமல் நீங்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி 40 தொகுதிகளிலும் நம் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளுகிறேன்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தோழமைக் கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியை மட்டுமே நமது குறிக்கோளாகக் கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறேன்.

இந்தக் கூட்டணியின் லட்சியமே இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை நல்லரசாக்கவும், அனைவரும் ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம், மகத்தான வெற்றி காண்போம்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media