குஜராத் மாநிலம் உண்மையிலேயே எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இருக்கிறதா என ஆய்வு செய்ய அரவிந்த் கேஜ்ரிவால், குஜராத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மோடியிடம் கேட்க வேண்டிய கேள்விகளின் பட்டியலோடு, மோடியை பார்க்க சென்ற கேஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸார், குஜராத் முதல்வரை காண முன் கூட்டியே அப்பாயின்மென்ட் வாங்கியிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர்.
மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அவருடன் நேருக்கு நேர் தான் கேட்கவிருந்த கேள்விகளை நிருபர்களை சந்தித்து கேஜ்ரிவால் பகிர்ந்து கொண்டார். அக்கேள்விகள் பின்வருமாறு:
நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.