கன்னியாகுமரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாகர்கோவிலில் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தின் போது, தமிழக மக்கள் சுபிட்சமாக, நன்றாக வாழ தான் எந்த தியாகத்தையும் செய்யத்தயார் என்றும், தனக்கு எதுவும் தேவை இல்லை, தான் எந்த சாதியையும், மதத்தையும் சாராதவன் என்று அவர் கூறினார்.
பிரச்சாரத்தின் போது மேலும் அவர் பேசியதாவது:
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் நிற்கிறார். அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்காக நாம் வந்திருக்கிறோம். 2016-ம் ஆண்டு விஜயகாந்த் முதல் அமைச்சர் ஆவதற்காக வாக்கு கேட்டு வரும்போது மற்ற கோரிக்கைகளை பற்றி சொல்லுங்கள். தற்போது தே.மு.தி.க.வோடு பா.ஜனதா, பா.ம.க., ம.தி.மு.க., கொங்கு, ஐ.ஜே.கே. போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கட்சிகளுக்கும், இந்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க.வுக்கும், அ.தி. மு.க.வுக்கும் மாறி, மாறி ஓட்டுப்போட்டது போதும். அவர்களுக்கு ஓட்டுப்போட்டு என்ன மிச்சம். ஏதாவது நல்லது செய்து கொடுத்திருக்கிறார்களா? இல்லையே. அப்படி செய்து கொடுத்திருந்தால் நான் ஏன் இங்கு வருகிறேன். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் போராடுகிறேன். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறோம். நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் காசை வாங்கிக்கொண்டு, மேல்சபை எம்.பி. சீட் வாங்கிக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நான் பெட்டி வாங்கியதாக தவறாக கூறி வருகிறார்கள்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமையும் பட்சத்தில் முதல் திட்டமாக மீனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாரதீய ஜனதா அகில இந்திய தலைவர் ராஜ்நாத்சிங் கூறி உளளார். நரேந்திர மோடியை பிரதமராக்கினால் மாநில திட்டங்களுக்கு வேண்டிய திட்டங்களை அவரால் செயல்படுத்திட முடியும்.
தஞ்சாவூரில் 9 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இது நாடா அல்லது காடா? இரவில் தான் மின்சாரத்தை திருட முடியும் என்பதைப்போல அனைவரும் அயர்ந்து தூங்குகிற நேரத்தில் கரண்டை திருடுகிறார்கள்.
என்னால் நிச்சயம் நரேந்திரமோடியிடம் சண்டைபோட முடியும். உங்களுக்கு வேண்டியதை கேட்டு பெற்றுத்தர முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்கநாற்கர சாலைத் திட்டம் பா.ஜனதா ஆட்சியின் போது பிரதமராக இருந்த வாஜ்பாயால் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே நாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல. சிறுபான்மை மக்களுக்கு விரோதிகள் ஜெயலலிதாவும், கருணாநிதியும்தான். தமிழக மக்களுக்கு என்ன செய்யவேண்டும்? அவர்களுக்காக எப்படி போராட வேண்டும்? என்று பார்க்க வேண்டும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.