உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரில் நேற்று நடைபெற்ற, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை விமர்சித்து பேசுகையில், “பெண்களை உளவு பார்ப்பதற்கு அக்கட்சியின் தலைவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்." என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:
நாட்டின் காவல்காரனாக தன்னை நியமிக்கும்படி மக்களிடம் மோடி கேட்கிறார். ஆனால் குஜராத்தில் இவரின் ஆட்சிக்காலத்தில் தொழிலதிபர் அதானி குழுமத்தின் சொத்துகள் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தப் பணம், நாடு முழுவதும் நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் தொகைக்கு இணையானது. இவ்வளவு பணத்தை இந்த காவல்காரர் ஒரு நிறுவனத்துக்கு தந்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பந்தல்கண்ட் பகுதிக்கு மத்திய அரசு ஒதுக்கியத் தொகை இங்கு வந்துசேரவில்லை. இப்பகுதிக்காக மத்திய அரசு ரூ.7,700 கோடி ஒதுக்கியது. ஆனால் இத்தொகை தலைநகர் லக்னோவிலேயே மாயமாகிவிட்டது.
பாரதிய ஜனதா, பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆட்சியில் இப்பகுதியில் வேலை வாய்ப்புத் திட்டங்கள் செயல் படுத்தப்படவில்லை. ஆனால் பந்தல்கண்ட் வழியாக தொழில் வளாகச் சாலை செல்வதற்கு காங்கிரஸ் வகை செய் துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பந்தல்கண்ட் பகுதியில் குடிநீர் கிடைக்காமலும் பட்டினியாலும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இது தொடர்பாக மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.