BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 April 2014

"முஸ்லிம் மக்களின் இடஒதுக்கீட்டுக்கு முதலில் நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதாதான்" எனக் கூறும் 8 முஸ்லிம் அமைப்புகள் அதிமுகவுக்கு ஆதரவு

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக 8 முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமத், இந்திய யூனியன் காயிதே மில்லத் லீக் தலைவர் எம்.தாவூத் மியாகான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் ஏ.பாத்திமா முஸாபர், அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயதுல்லா, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், இந்திய தேசிய முஸ்லிம் லீக் தலைவர் ஒய்.ஜவஹர் அலி, சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை தலைவர் மேலை நாசர் ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் கடுமையாக போட்டி நிலவுகிறது. 19 தொகுதிகளில் 5 முனைப் போட்டியும், மற்ற தொகுதிகளில் 4 முனைப் போட்டியும் நடக்கிறது. இந்நிலையில், பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் யார் பக்கம் உள்ளனர் என்று பலர் மாறி மாறி பேசி வருகின்றனர். முஸ்லிம் மக்களின் இடஒதுக்கீட்டுக்கு முதலில் நடவடிக்கை எடுத்தவர் முதல் வர் ஜெயலலிதாதான். இது தொடர் பாக ஆணையம் அமைத்து இட ஒதுக்கீடு வழங்கும் நேரத்தில் ஆட்சி மாறிவிட்டது. இதையடுத்து, ஆணையத்தின் நிர்ப்பந்தத்தால்தான் அப்போதைய முதல்வர் கருணாநிதி, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கினார்.

எங்களின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க தற்போது முதல்வரிடம் கேட்டுள்ளோம். அதை நிறைவேற்றித் தருவதாக கூறியுள்ளார். மேலும், திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், சிறையில் அவதிப்படும் 55 முஸ்லிம்களை கருணை அடிப்படையில் விடுவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்துள்ளார். முக்கியமாக தேர்தல் முடிந்த பிறகும், பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளோம். அதையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media