06.04.2014 அன்று நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த யுவராஜ் சிங் மீது நாடு முழுவதும் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில் அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தனது அதிரடியான ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார். இது குறித்து ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு விளையாடி வரும் இலங்கை சுழற்பந்து வீச்சு உலகச் சாதனை நாயகன் முத்தையா முரளிதரன், சக வீரரான யுவராஜ் சிங், 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் மேட்ச்-வின்னராகத் திகழ்வார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
நான் யுவராஜிடம் நிறைய பேசி வருகிறேன். அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் வல்லுனர் ஆவார். ஆனால் அவரது தன்னம்பிக்கை சற்று தளர்ச்சியடைந்திருந்தது. உலகக் கோப்பை இருபது ஓவர் இறுதிப்போட்டிக்கு பிறகே இந்திய ரசிகர்கள் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். நான் 20 ஆண்டுகளாக உயர்மட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளதால் யுவராஜ் சிங்கின் மனநிலை எனக்கு நன்றாக புரியவே செய்தது.
அவரது தன்னம்பிக்கையை மீட்டு விட்டால் அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை அனைவரும் அறிவர். கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் நான் அவரைப்பற்றி நினைத்தது சரி என்பதை நிரூபித்தது. எனவே 2015 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்காக பெரிய பங்காற்றுவார் என்று கருதுகிறேன், அவர் அந்தத் தொடரிலும் மேட்ச் வின்னராகத் திகழ்வார்.
இவ்வாறு கூறியுள்ளார் முத்தையா முரளிதரன்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.