கடந்த வியாக்கிழமை அன்று, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 9–ம் நம்பர் நடைமேடையில் பெங்களூர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்ற போது, குண்டுகள் வெடித்த ‘எஸ்-4 மற்றும் எஸ்-5’ பெட்டிகளுக்கு அடுத்த பெட்டியான ‘எஸ்-3’ம் எண் கொண்ட பெட்டியில் இருந்து இறங்கிய உயரமான ஒரு நபர் அவசரம் அவசரமாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும் காட்சி பதிவாகி இருந்தது.
கைக்குட்டையை கட்டி முகத்தை மறைத்தபடி பதற்றத்துடன் அவர் வேக வேகமாக ஓடும் காட்சியும் பதிவாகி இருந்தது. கேமராவில் சிக்கிய வாலிபரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.
ஒருவேளை, அந்த நபர் குண்டு வைத்தவராக இருந்திருந்தால், பெங்களூரில் இருந்தே அவர் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்திருக்கலாம் என்று தமிழக போலீசார் கருதினர். காலை 7.15 மணி அளவில் வெடிக்கும் வகையில் குண்டை தயார் செய்து வைத்து விட்டு சென்ட்ரலில் இறங்கிச் செல்ல அவர் திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஆனால், அவர் எதிர்பார்த்தபடி நடக்காமல், காலை 6.20 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய ரெயில், தாமதமாக 7.05–க்கு வந்ததால், குண்டு வெடிக்கப்போவதை அறிந்து கொண்டு சரியாக 7.08–க்கு (குண்டு வெடிப்பதற்கு 7 நிமிடத்துக்கு முன்பு) அவர் தப்பித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரலில் குண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவசரமாக வெளியே ஓடிய அதே வழுக்கை தலை மர்ம நபர், பெங்களூர் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளிலும் காணப்படுகிறான். தமிழக போலீசாரின் சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் கிடைத்துள்ள இந்த ஆதாரம், சென்னை செண்ட்ரல் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் புதிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.