வாழ்க்கைத்துணை, நண்பர்கள், உறவினர்கள், வேலை செய்யும் இடத்தில் உடனிருப்போர் போன்றோருடன் தொடர்ந்து வாதங்களில் ஈடுபடுவது நடுத்தர வயதிலேயே மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும் என்று டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஆண்கள் மற்றும் வேலையில்லாதோர் இத்தகைய பாதிப்புகளை விரைவில் அடைவார்கள் என்று தொற்றுநோய் மற்றும் சமூக சுகாதார இதழில் வெளியிட்டுள்ள தங்களின் கட்டுரையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நெருங்கிய குடும்ப உறவுகளினால் பெறும் கவலைகள், கோரிக்கைகள் போன்றவையும் அதிகளவு மரண ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு தனி நபரின் ஆளுமை மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறன் போன்றவையும் இந்தக் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் குழு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வாதங்கள் ஆண் அல்லது பெண்ணின் அகால மரண வாய்ப்பை சாதாரணமானதை விட இரண்டு அல்லது மூன்று முறை அதிகரிக்கின்றது என்று குறிப்பிடுகின்றது. இருப்பினும் இதற்கான காரணங்களை அவர்களால் தெளிவாக விளக்க முடியவில்லை.
இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இத்தகைய வாதங்களை மேற்கொள்வோர் இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்துக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த சமூக சூழ்நிலைகளும், நண்பர்களின் பரந்த வலைப்பின்னலும் ஒருவரின் சுகாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய சூழ்நிலைகளைக் கையாள்வதில் ஒருவரின் ஆளுமைத்தன்மையும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதுவும் ஆய்வுகளின் மூலம் தெரிவிக்கப்பட்டன.
ஆனால், தற்போதைய சூழ்நிலையில் அழுத்தம் குறித்த உடலியல் விளைவுகளான உயர் ரத்த அழுத்தம், அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து போன்றவை மரண ஆபத்தை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.