கர்நாடகாவில் இட்டமாடு கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா-குமாரி தம்பதியரின் மகள் தேஜஷ்வினி (18) பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
கர்நாடக மாநிலத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. இட்டமாடு கிராமத்தில் தேர்வு முடிவுகளை பார்க்க இணையதள வசதி இல்லை.எனவே பிடதியில் உள்ள உறவினர் அனுமந்தப்பாவிடம் தேஜஷ்வினியின் முடிவுகளை இணையதளத்தில் பார்க்குமாறு கூறிவிட்டு குமாரியும் ராமசந்திரப்பாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர். தேஜஷ்வினியின் தேர்வு முடிவுகளை பார்த்த அனுமந்தப்பா அவரை செல்போனில் தொடர்புகொண்டு, 'நீ தேர்வில் தோல்வியடைந்து விட்டாய். ஒழுங்காக படிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாய்' என விளையாட்டாகத் திட்டியிருக்கிறார். அதே நேரத்தில் தேஜஷ்வினியின் தந்தை ராமசந்திரப்பாவிடம் செல்போனில் பேசிய அவர், 'நான் தேஜஷ்வினியிடம் விளையாட்டுக்கு பரீட்சையில் ஃபெயில் என சொல்லி இருக்கிறேன். நீங்களும் கொஞ்சம் கோபமாக பேசுங்கள்' என சொல்லி இருக்கிறார்.
மதியம் 12.30 மணிக்கு இனிப்புகளுடன் வீட்டுக்கு வந்த ராமசந்திரப்பா, மகள் தேஜஷ்வினியை தேடினார். வீடு முழுக்க தேடியும் அவரை காணவில்லை. மதியம் 2 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றை பார்த்தபோது தேஜஸ்வினி சடலமாக மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் மாரடைப் பால் தேஜஸ்வினி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. “கிணற்றில் குதிக்கும்போதே அதிர்ச்சியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது” என உறவினர்கள் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு தேஜஷ்வினியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அவரின் கண்களை பெற்றோர் தானம் செய்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.