BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 7 May 2014

திக் திக் திருமா, சிதம்பரத்தில் வெல்வாரா? அந்த மூன்று நாட்களில் நடந்தது என்ன?



சிதம்பரம் தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிட்டார், திமுக கூட்டணியில் உள்ளதாலும், சிதம்பரம் தொகுதியில் தலித்களின் அதிகமாக உள்ளதாலும் சென்ற முறையை போன்றே இம்முறையும் எளிதாக வெல்லலாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எண்ணியிருந்தனர்.

எப்போதும் திருமாவுக்கு கடும் போட்டியை கொடுக்கும் பாமகவோ ஆரம்பத்தில் இருந்தே சொதப்பியது, முதலில் ஒரு வேட்பாளரை அறிவித்தார்கள், பிறகு அவருக்கு பதிலாக கடைசி நேரத்தில் கட்சியில் இணைந்த மணிரத்தினம் என்பவருக்கு சீட்டு கொடுத்தார்கள், ஆனால் அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்ய அவரது மனைவி சுதா மணிரத்தினம் பாமக வேட்பாளர் ஆனார், மாம்பழத்திற்கு வாக்களிக்க சொல்லும் சுவர் விளம்பரங்களில் கோபி என்றும் மணிரத்தினம் என்றும் சுதா மணிரத்தினம் என்றும் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது, மேலும் மணிரத்தினம் கட்சிக்கு புதியவர் என்பதால் கட்சியை ஒருங்கிணைத்து தேர்தல் வேலைகள் செய்ய திணறினார்கள்.

அதிமுகவோ ஆரம்பத்திலிருந்தே அசட்டையாக இருந்தது, தேர்தல் ஸ்பெசலிஸ்ட் செங்கோட்டையன் சிதம்பரம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் அவர் சிதம்பரத்தில் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து வந்தார், பாமகவின் ஆரம்ப சொதப்பல்கள், தொகுதியில் போட்டியே அதிமுக மற்றும் திருமாவுக்கு இடையில் இருந்தது.

தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன் பாமக வேட்பாளரின் கணவர் மணிரத்தினம் மணியை களத்தில் இறக்கினார், திருமாவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மணிரத்தினம் இறக்கிய பணம் களத்தை மாற்ற ஆரம்பித்தது, இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திமுகவினருடன் மோதிக்கொண்டனர், திருமாவளவன் திமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்தை பொதுவில் பெயர் சொல்லி அழைத்தார் என்றும் அது தொடர்பாக திமுக மற்றும் விசிக தொண்டர்களிடையே மோதல் எழுந்தது என்றும் கூறப்படுகிறது, இதையடுத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிர் விடுதலை சிறுத்தைகளை கட்சி அலுவலகத்துக்கே வரவேண்டாம் என்று கோபமாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திமுக பொறுப்பாளர் ஒருவரின் மகள் தலித் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறு திருமணம் செய்து கொண்டார் என்றும் அது தொடர்பாக நடைபெற்ற பிரச்சினைகளினாலும் திமுகவினர் திருமாவுக்கு வேலை செய்வதை பல இடங்களில் நிறுத்திவிட்டனர் என்றும் கூறப்பட்டது, சிதம்பரம் தொகுதியில் வடக்குமாங்குடி கிராமத்தில் தலித் குடியிருப்பு பகுதியில் பாமகவுக்கு ஓட்டு கேட்க சில திமுகவினர் சென்றதாகவும் அங்கே சிலர் பொண்ணு கொடுக்கின்றீர்களா ஓட்டு போடுகிறோம் என்று கேட்டதாகவும் அதை அடுத்து தேர்தல் முடிந்த பின் பலர் ஒன்று சேர்ந்து தலித் குடியிருப்பில் இருந்தவர்களை தாக்கியதாகவும் கூறப்பட்டது, ஆனால் இதை தலித் தரப்பினர் மறுக்கின்றனர், பாமகவுக்காக ஓட்டு கேட்டபோது நாங்கள் திருமாவுக்கு தான் வாக்களிப்போம் என்றதால் தான் எங்களை தாக்கினார்கள் என்று கூறுகின்றார்கள். தேர்தலுக்கு சில நாட்கள் முன் இந்த பகுதியில் நடந்த சச்சரவுகள் தொகுதி முழுக்க பரவியது.

பாமக வேட்பாளர் தேர்தலுக்கு முந்தைய மூன்று நாட்களிள் செய்த செலவும், கட்சி வித்தியாசமின்றி வன்னியர்கள் அனைவரும் பாமகவை ஆதரித்ததும் கடைசி மூன்று நாட்களில் திமுக விடுதலை சிறுத்தைகளிடையே ஏற்பட்ட  பிரிவும் அதனால் திமுகவினர் திருமாவுக்காக வேலை செய்யாமல் தவிர்த்ததும் திருமாவளவன் அவர்களை 16ம் தேதி என்ன மாதிரியான முடிவு வருமோ என்று திக் திக்கென்று காத்திருக்க வைத்துள்ளது.

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெல்வாரா உங்கள் கருத்து என்ன?



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media