BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 August 2013

ராங் டைமிங்கில் சிக்கிய "தாய்"சிறுத்தை, திருமாவளவன் மீதான புகார் நாடக காதல் பழிவாங்கும் அரசியலா?



நேற்று கோவையில் கவிதா என்ற பெண் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மீது காவல்துறையில் புகார் அளித்தவுடன் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தொற்றிக்கொண்டது,  ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்களிலோ இந்த சிக்கல் கடந்த ஆறு மாதகாலமாகவே பேசப்பட்டு வருகின்றது.



நேற்று கவிதா கோவை மாநகர காவல்துறை ஆணையரிடத்தில் கொடுத்த புகாரில் தான் கோவையில் உள்ள கவிதா தியேட்டர் உரிமையாளரின் மகளான தான் விவாகரத்தானவர் என்றும் தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும்  குழந்தையை தத்தெடுப்பது தொடர்பாக தில்லி சென்ற போது விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் என்னை திருமணம் செய்வதாக கூறியிருந்தார். கோவை ரேஸ் கோர்சில் உள்ள எனது வீட்டுக்கு வந்து செல்வார்.

இந்த நிலையில் சில காரணங்களைக் கூறி என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகிறார். மேலும் எனக்கு மிரட்டல்களும் வருகிறது. எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது சொத்துக்களை திருமாவளவனின் பெயரைக்கூறி விஜயகுமார், சீனிவாசன், கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

கவிதா தரப்பு ஆதாரமாக சில போட்டோக்களை வெளியிட்டுள்ளனர், ஆனால் இந்த போட்டோக்கள் ஒரு சாதாரணமான குடும்ப நிகழ்வில் கலந்து கொண்ட போட்டோக்களாகவே இருக்கின்றன, கவிதா தரப்பு மேலும் சில ஆதாரங்கள் உள்ளன அதனையும் வெளியிடுவோம் என்று கூறிவருகின்றனர்.

கடந்த ஆறு மாத காலமாகவே இந்த பஞ்சாயத்து கட்சி வட்டாரங்களில் நடந்து கொண்டுள்ளது, நேற்று புகாருக்கு பின் வெளிஅரங்கில் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது, சமீபகாலமாக டாக்டர் ராமதாஸ் மற்றும் கொங்கு வேளாளர் பேரவையின் மணிகண்டன் போன்றோரால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் நாடக காதலுக்கு ஆதரவளிக்கிறார்கள், சொத்துக்காக நாடக காதல் செய்கிறார்கள் என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் "தாய்" சிறுத்தையென்று விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்களால் அழைக்கப்படும் திருமாவளவன் மீதே அதே போன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள். இது சாதி அரசிய‌ல் வாதிகளின் பழிவாங்கும் போக்கு என்று விடுதலை சிறுத்தைகளின் தொண்டர்கள் பொறுமுகிறார்கள், ஆனால் விடுதலை சிறுத்தைகளின் அதிகாரப்பூர்வ அறிக்கையோ சாதி அரசியல் பழிவாங்கும் குற்றச்சாட்டு  என்று சிறுத்தையாக சீறாமல்  பொய்புகார், பணப்பிரச்சினை என  கவிதா மீது குற்றம் சாட்டுவது என்று ஈனஸ்வரத்தில் முனகுவது வேறு பின்புலன்கள் உள்ளதை உணர்த்துகிறது.

சென்ற ஆண்டும் இது போன்ற ஒரு குற்றச்சாட்டு நடிகை விஜயலட்சுமியால் சீமான் மீது வைக்கப்பட்டது, அப்போது சீமான் விஜயலட்சுமிக்கு பிறந்த நாள் கேக் ஊட்டிவிடுவது போன்ற படங்கள் வெளியாகின. தமிழ்நாட்டை பொறுத்தவரை சாமியாருக்கு பெண் தொடர்புகள் இருந்தால் தான் மக்கள் பொங்கி எழுவார்கள், தங்களை ஆளும் அரசியல்வாதிகளின் தனி மனித ஒழுக்கங்கள் குறித்து எந்த பிரச்சினையும் இல்லை, கட்சி தலைவர்கள், அரசியலில் உயர் பதவி வகித்தவர்கள், அமைச்சர்களில் தொடங்கி வட்டச்செயலாளர்கள் வரை மனைவி, துனைவி என்று  வலம் வரும் மாநிலத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளோ, தனி மனித ஒழுக்க குற்றச்சாட்டுகளோ மக்களை பாதிக்க போவதில்லை.

கோவை பகுதியில் செல்வந்தரான கவிதா கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவராக இருந்த போதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் உடன்  இருந்த அறிமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் செயல்பட்டுள்ளார், கட்சி சார்பில் டிவி தொடங்க பெரிய அளவில் நிதி உதவி செய்வதாகவும் வாக்களித்திருந்தார்,  திருமாவளவனுடன் இருந்த நட்பினால் கோவை பகுதியில் கட்சி வட்டாரங்களில் பல தலையீடுகள் செய்வதும், கட்சியின் பெயரை வெளியேயும் பயன்படுத்தி இருந்துள்ளார்,  கட்சி ஆட்கள் சிலருடன் இணைந்து செய்த பிசினஸ்களில் கவிதாவின் சில சொத்துகள் பிரச்சினையாக உள்ளன, அந்த சொத்துகளை  மீட்க தான் கடந்த ஆறுமாதமாக பல முறை பேச்சுவார்த்தைகள் பஞ்சாயத்துகள் நடந்தும் செட்டில் ஆகாததால் இந்த நிலையை வந்தடைந்துள்ளது. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media