BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 25 August 2013

இடிந்தகரையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு!! இடிந்தகரை மீது ஒரு கண் வைத்துக்கொளுங்கள்

இடிந்தகரையில் அணுமின் ஆதரவாளர்கள் நாட்டு வெடிகுண்டு வீச்சு என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர், முழு அறிக்கையும் கீழே


அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை 627 104
நெல்லை மாவட்டம் ஆகஸ்ட் 25, 2013, 12:30 am

இடிந்தகரையில் அணுமின் ஆதரவாளர்கள்
நாட்டு வெடிகுண்டு வீச்சு

ரூ. 50,000 விலை மதிப்புள்ள 50 மீன்பிடி வலைகளை இடிந்தகரை மீனவ மக்களுக்கு வழங்கியதாக செய்தி பரப்பி, கடல் தொழிலுக்கு சம்பந்தமேயில்லாத ஊர்களில் வசிக்கும் மக்களுக்கும், கடலில் மீன்பிடிக்கப் போகாத மக்களுக்கும் வலைகள் வழங்கி அணுமின் நிர்வாகம் தனது ஊழல் சகாக்களுடன் சேர்ந்து மக்கள் பணத்தை திருடியிருக்கிறது என்கிற உண்மையை நாங்கள் நேற்று அம்பலப்படுத்தியிருந்தோம்.

மக்கள் பணத்தை திருடுவதோடு, இரண்டு ஆண்டுகளாக அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடிவரும் இடிந்தகரை ஊர் மக்களைக் கேவலப்படுத்துவதும், ஊருக்குள் மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி வன்முறை நிகழச் செய்வதும்தான் இவர்களின் சதித் திட்டம் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த வலை வழங்கும் திட்டத்தில் நடந்திருக்கும் ரூ. 25 லட்சம் ஊழலை உடனடியாக விசாரித்து குற்றம் செய்திருக்கும் அணுஉலை அதிகாரிகள் மீதும், காவல்துறை, உளவுத் துறை அதிகாரிகள் மீதும், பி. எல். அந்தோணி சந்தியாகு, வால்டர் எட்வின், சிலுவை அந்தோணி மகன் கபூர் ஆகிய சமூக விரோதிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தோம்.

இந்த ஊழலைக் கண்டித்து, உறுதியான நடவடிக்கைக் கோரி ஆகஸ்ட் 24, 2013 அன்று இடிந்தகரை மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்தார்கள். பகல் முழுவதும் ஊர்க் கூட்டமும் நடத்தப்பட்டு, ஊர் மக்களால் இந்தப் பிரச்சினை பேசப்பட்டது.

இந்நிலையில் ஆகஸ்ட் 24, 2013, சனிக் கிழமை இரவு 10:30 மணியளவில் இடிந்தகரை மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே வெனாசீஸ் என்பவர் வீட்டு முன்பு இரண்டு இரு சக்கர வாகனங்களில் கீழ்க்காணும் நான்கு பேர் வந்து “இந்த ஊரை அழிக்காமல் விட மாட்டோம்; இனி தினமும் இப்படி நடக்கும்” என்று கத்திவிட்டு இரண்டு நாட்டு வெடி குண்டுகளை வீசிவிட்டு வேகமாகச் சென்றனர்:
[1] கபூர், த/பெ சிலுவை அந்தோணி, வயது 33.
[2] சாக்ரடீஸ் (எ) முட்டி, த/பெ சிலுவை அந்தோணி, வயது 36.
[3] லாரன்ஸ், த/பெ சிலுவை அந்தோணி, வயது 38.
[4] சத்தீப், த/பெ பெர்னாட், வயது 22.
அந்த குண்டுகள் பயங்கரமான சத்தத்துடன் வெடித்தன. இரு சக்கர வாகனங்களில் இடிந்தக்கரை சுனாமி நகர் நோக்கிச் சென்று, அங்கும் ஏதோ கத்திவிட்டு இன்னும் ஒரு குண்டை வெடித்துவிட்டு சென்றிருக்கின்றனர்.

திருமதி மேரி (க/பெ செபாஸ்டியன், வயது 75), அமலி (க/பெ நஸ்ரேன், வயது 70) மற்றும் லில்லி புஷ்பம் (க/பெ கிளமெண்ட், வயது 58) ஆகிய மூவரும் புனித லூர்து மாதா ஆலாய வளாகத்தில் தூங்குவதற்காக வரும்போது தெருவிளக்கு வெளிச்சத்தில் அந்த நான்கு பேரையும் தெளிவாகப் பார்த்திருக்கின்றனர். அதே போல சுனாமி நகர் வேளாங்கன்னி மாதா கோவில் அருகே பேசிக் கொண்டிருந்தவர்களும் இந்த சமூக விரோதிகளை தெளிவாகப் பார்த்திருக்கின்றனர்.

இடிந்தகரையைச் சார்ந்த இந்த நபர்கள் தற்போது பரமேஸ்வரபுரம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுள் கபூர் என்பவர் கூடங்குளம் அணுமின் நிலயத்தில் துணை ஒப்பந்தக்காரராகவும், ஆதரவாளராகவும் வேலை செய்து வருகிறார். இவருக்கு பல அணுஉலை அதிகாரிகளோடும், காவல்துறை, உளவுத் துறை அதிகாரிகளோடும் நெருங்கியத் தொடர்பு இருப்பது அனைவருக்கும் தெரியும்.

இடிந்தகரை ஊருக்குள் அரசு அனுமதியற்ற திருட்டு மது வியாபாரம் நடப்பதற்கும் மேற்கண்ட நபர்கள் காரணமாக இருந்து வருகின்றனர்.

ஊரைப் பிளவுபடுத்தி கலகம் விளைவிக்கும் நோக்கோடு மேற்கண்ட நபர்கள் இந்த சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூடங்குளம் காவல் நிலையத்தில் முறையாக முறையீடு செய்திருக்கிறோம்.

மின்சாரம் உற்பத்தி ஆகாத, முடங்கிக் கிடக்கும் அணுமின் நிலையப் பிரச்சினையை மூடி மறைக்க முயன்று கொண்டிருக்கும் அதிகார வர்க்கம், தற்போது ஆபத்தான மக்கள் விரோத நடவடிக்கைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபடுவதை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறோம்.

தமிழ் மக்கள் இடிந்தகரை மீது ஒரு கண் வைத்துக்
கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media