BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 29 September 2013

எல்லா செயல்பாடுகளுக்கும் ‘பிலிம் சேம்பர்’ தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா ‘அவமானங்கள்’ குறித்து தமிழக அரசு கைவிரிப்பு

சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் சென்னையில் நடைபெற்ற இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் மூத்த கலைஞர்கள் பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர். மேலும் விழா குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதியும் தன் பங்குக்கு தமிழக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

தமிழக அரசின் சார்பில் செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அதில் அவர் கூறியிருப்பதாவது :

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதையும், இறுதி நாளில் இந்தியக் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கியதையும் பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, ஒரு விழா எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக சினிமா நூற்றாண்டு விழா விளங்கியதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எல்லா செயல்பாடுகளுக்கும் பிலிம் சேம்பர் தான் பொறுப்பு : நூற்றாண்டு விழா அவமானங்கள் குறித்து தமிழக அரசு கைவிரிப்புஇதிலிருந்தே கருணாநிதியின் இந்த அறிக்கை வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையிலே, இது போன்ற விழாக்களிலே ஒருவர் தலைமை தாங்குவது தான் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை என்றும், ஆனால் இந்த மரபு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் கடைபிடிக்கப்படவில்லை; மூத்த கலைஞர்களுக்கு முன் வரிசையிலே இடம் ஒதுக்கப்படவில்லை; சில கலைஞர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவினை நடத்தியது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை. இந்திய சினிமா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.10 கோடி நிதி வழங்கப்பட்டது.

ஆனால், இந்த விழாவிற்கான அழைப்பிதழ்களை அச்சிடுவது, திரைப்படக் கலைஞர்களை அழைப்பது, முக்கிய விருந்தினர்களை அழைப்பது என அனைத்து ஏற்பாடுகளையும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தான் மேற்கொண்டது என்பதை கருணாநிதிக்கு முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திரைப்பட விழாக்களில் தலையிடுவது, திரைப்படத் தொழிலில் தன் குடும்ப உறுப்பினர்களை நுழைப்பது, திரைப்பட கலைஞர்களை வைத்து பாராட்டு விழாக்களை நடத்துவது, துதிபாடிகள் முன் உலா வருவது, திரைப்படத் துறையிலுள்ள முன்னணி நடிகர்கள், நடிகையர்களை தன்னுடைய பாராட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறும், இலவசமாக கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுமாறும் வற்புறுத்துவது ஆகியவை கருணாநிதிக்கு தான் கை வந்த கலை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

சின்னத்திரை கலைஞர்கள் சார்பில் பாராட்டு விழா, தமிழ்நாடு திரைப்படத் துறை சார்பில் பாராட்டு விழா, நன்றி அறிவிப்பு விழா என பல்வேறு பாராட்டு விழாக்கள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டன. அனைத்து திரைப்பட விழாக்களையும், திரைத் துறையைச் சார்ந்த மாநாடுகளையும் தன்னுடைய பாராட்டு விழாக்களாக மாற்றிக் காட்டிய பெருமை கருணாநிதியையே சாரும்.

இது போன்ற விழாக்களை நடத்துவதற்காக படப்பிடிப்பு பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதையும், திரைப்படத் துறையினரின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டதையும் திரைப்படத் துறையினர் இன்னமும் மறக்கவில்லை என்பதை கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவர் மீதும் அளவற்ற அன்பும், பாசமும், நேசமும் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்வதோடு, திரைப்படக் கலைஞர்களை “காக்கா கூட்டம்” என்று கருணாநிதி கூறியதை அவர்கள் இன்னும் மறந்து விடவில்லை என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தன் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் முன் வரிசையில் அமரச் செய்து தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தி, தமிழறிஞர்களை இழிவுபடுத்திய கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில் அவருடைய குடும்பத்தினருக்கே மேடையில் இடம் அளிக்காத கருணாநிதி, பல முன்னணி திரைப்படக் கலைஞர்களை கீழே அமரச் செய்த கருணாநிதி, திரைப்படத் துறையையே கபளீகரம் செய்த கருணாநிதி, இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விமர்சிப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

“தோளில் கிடக்கும் துண்டு என்பது பதவிக்கு சமம். இடுப்பில் உள்ள வேஷ்டி தான் மானம். கொள்கைக்காக துண்டை உதறிப் போட்டுவிட்டு போக தயங்க மாட்டோம். சுயமரியாதைக் கொள்கைகளுக்காக வேஷ்டியை இழக்க மாட்டோம்” என்ற கொள்கையுடன் இருந்த தி.மு.க.வை, “வேஷ்டி போனாலும் பரவாயில்லை, துண்டு பறிபோய்விடக் கூடாது” என்ற நிலைக்கு மாற்றிக் காட்டிய தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, “துரோகம்” என்ற வார்த்தையைத் தவிர, சுயமரியாதைக் கொள்கை பற்றியோ, பகுத்தறிவு சிந்தனைகள் பற்றியோ, தன்மானம் குறித்தோ பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media