நாமக்கல்லில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் ஆணைய விதிமுறைகள் நியாயமற்றதாக இருக்கிறது என்றும், அதை எதிர்த்து வழக்கு தொடர போவதாகவும் கூறியிருக்கிறார்.
பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து அவர் பேசியதாவது:
கட்சியின் தலைவர் அல்லது நட்சத்திரப் பேச்சாளர் பேசும் கூட்டத்தின் மேடையில் வேட்பாளர் இருந்தாலும் அல்லது அவரது பெயரோ புகைப்படமோ இருந்தாலும், அவரது பெயரை உச்சரித்தாலும், கூட்டத்திற்கு ஏற்பட்டதாக கருதப்படும் செலவு அனைத்தும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு நியாயமற்றது.
பொதுமக்கள் தாங்களாகவே தங்களது சொந்த செலவில் வாகனங்களில் வந்தாலும், அந்தச் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்பது எப்படி நியாயமாகும்? ஒரு மக்களவைத் தொகுதி என்பது கிட்டத்தட்ட ஒரு மாவட்டத்திற்கு இணையானது.
நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன் என்றால் அந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் என்னைப் பார்க்க வேண்டும், என்னுடைய உரையினை கேட்க வேண்டும் என்று நான் பேசும் இடத்திற்கு தங்களுடைய சொந்தச் செலவில் பொதுமக்கள் வாகனங்களில் வருவது என்பது இயற்கையானதுதான். இதே போன்று, அரசியல் தலைவர்களின் பதாகைகளை வைப்பதும், கட்அவுட்களை வைப்பதும், வழக்கமான அரசியல் கலாச்சாரம் தான். இது தான் காலம் காலமாக நடந்து வருவது.
1952-ஆம் ஆண்டிலிருந்து அண்ணா காலத்திலும் சரி, எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, இதே நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 32 ஆண்டுகளாக நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காலத்திலும் சரி இது போன்ற நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், 2014-ல் நடைபெறுகின்ற இந்தத் தேர்தலில் திடீரென்று தேர்தல் ஆணையம் இது போன்ற கட்டுப்பாட்டினை விதிப்பதால் இந்தத் தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரே இங்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் என்று வந்துவிட்டாலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பல்வேறு ஆணைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது. எந்த ஒரு சிறிய உத்தரவு வெளியிட வேண்டுமென்றாலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் புறம்பானது ஆகும்.
'ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடிப்பது' என்று சொல்வார்களே, அதைப் போல, இப்போது வேட்பாளரே தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிற்க முடியாத சூழ்நிலையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாதென்றும், இத்தொகுதி வேட்பாளர் என்று கூட சொல்லக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஜனநாயகத்தையே கேலிக்கூத்து ஆக்குவதாகும்.
எனவே, இது குறித்து நீதிமன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவின் காரணமாக இந்தத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை நான் அறிமுகம் செய்ய முடியவில்லை"
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருந்தார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.