கடந்த மாதம், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கும், தன் மனைவிக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருக்கிறது என தவறான செய்திகளை வெளியிட்டதற்காக, ஜீ டி.வி. செய்தி சேனல், நியூஸ் நேஷனல் நெட்ஓர்க் செய்தி நிறுவனம், தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி ஜி.சம்பத்குமார் ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன்னை பற்றி அவதூறான செய்திகள் வெளியிட்டதற்காக, அவர்களிடம் இருந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடும், தன்னை பற்றி செய்தி வெளியிட அவர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென தோனி கேட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.தமிழ்வாணன், மகேந்திரசிங் தோனியை பற்றி செய்தியை வெளியிட ஜீ டி.வி. செய்தி சேனலுக்கும், நியூஸ் நேஷனல் செய்தி நிறுவனத்துக்கும் இடைக்கால தடை விதித்தார்.
இதை தொடர்ந்து, ஜீ (டி.வி.) மீடியா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:
மேட்ச் பிக்சிங்' விவகாரம் தொடர்பாக பல்வேறு உண்மைகளை மறைத்து, இந்த வழக்கை தோனி தொடர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு என்பது தற்போது ஒரு நாட்டின் பெருமைக்குரிய விளையாட்டாக மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையில், 'மேட்ச் பிக்சிங்கில்' ஈடுபட்டதாக 4 கிரிக்கெட் வீரர்களை, டெல்லி போலீசார் கைது செய்தபோது, இந்தியா முழுவதும் ஒரு அதிர்ச்சி அலை வீசியது. இதுசம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில், அந்த 4 வீரர்களும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால்தான், இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விசாரணை குழுவில் ஒரு உறுப்பினராக இருந்த நீலாய் தத்தா தாக்கல் செய்த தனி அறிக்கையில், கடந்த 2013-ம் ஆண்டு மே 12-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையேயான ஆட்டத்தின் போது, தோனி 'பேட்டிங்' செய்த விதம் குறித்து சுதந்திரமான விசாரணை அமைப்பை கொண்டு விசாரிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த அறிக்கை விவரங்களை, தோனி இந்த கோர்ட்டில் தாக்கல் செய்யவில்லை. இந்த குழுவின் முன்பு தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலம் விவரம் அனைத்தும், இணைய தளங்களில் வெளியாகியுள்ளது. இதன்பின்னர், இந்த மோசடியின் தீவிரத்தை உணர்ந்து, மற்றவர்களை போல் நாங்களும் செய்திகளை வெளியிட தொடங்கினோம்.
ஆனால், எங்களது செய்தியில், 'மேட்ச் பிக்சிங்கில்' தோனி மற்றும் அவரது மனைவிக்கு நேரடியாக தொடர்பு உள்ளது என்றோ, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற டோனி முயற்சி செய்தார் என்றோ நாங்கள் குறிப்பிடவில்லை.
எனவே, டோனியின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படுத்தி விட்டதாக எங்கள் மீது குற்றம் சுமத்துவது ஏற்க முடியாது. பொதுமக்கள் மத்தியில், கிரிக்கெட் விளையாட்டுக்கு உள்ள புகழை விட, தோனியின் புகழ் பெரியது கிடையாது.
எனவே, தோனி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். அவரை பற்றி செய்தி வெளியிடுவதற்கு விதிக்கப்ட்ட இடைக்கால தடையை நீக்கவேண்டும்.
இவ்வாறு அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.