BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 April 2014

பாமக போட்டியிட்ட தொகுதிகளில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள்- ராமதாஸ்

பாமகவினருக்கு எதிராக திட்டமிட்ட வன்முறைகள் நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்திருப்பது மகிழ்ச்சியும், நிம்மதியும் அளிக்கும் வேளையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் வன்முறைகள் கவலையளிக்கின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் இத்தகைய வன்முறைகள் நடத்தப்படுவது இயல்பான ஒன்றாக தோன்றவில்லை.

தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொம்மிடி பகுதியில் தேர்தல் நாளன்று வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் எடுத்துசென்ற அ.தி.மு.க.வினரை தடுத்ததற்காக பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதியமான் கோட்டை என்ற இடத்தில் ஆளுங்கட்சியினரின் முறைகேடுகளை தடுக்க முயன்ற பா.ம.க.வினரை அந்த ஊர் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி அப்பாவி பா.ம.க.வினர் 3 பேரை கைது செய்திருக்கிறார். பென்னாகரத்திலும் இருவர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட நெமிலி, ஆரணி தொகுதியில் நடுக்குப்பம், அவ்வையார் குப்பம் ஆகிய இடங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்னியர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக நியாயம் கேட்கச் சென்ற வன்னியர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உள்ளூரில் வாக்களிக்க வந்த சென்னைஉள்ளிட்ட வெளியூர்களில் பணியாற்றும் இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவர்களின் எதிர்காலம் பாழாகியிருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் பெருமளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால் பா.ம.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதனால் கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் பா.ம.க.வினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஆளுங்கட்சியினரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி காவல்துறை மூலம் பா.ம.க.வினர் மீது பொய் வழக்குகளை பதிவு செய்து தங்களது ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கின்றனர். தோல்வி பயம் காரணமாக இவ்வாறு செய்வது வாக்களித்த மக்களையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும்செயலாகும்.

எனவே, வட மாவட்டங்களில் நிகழும் வன்முறைகளை தடுப்பதுடன், அது குறித்து நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media