BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

ரயில் காலதாமதமாக வந்ததால் தான் சென்னை சென்டிரலில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது- இல.கணேசன்


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு உறுப்பினரும், தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளருமான இல.கணசேன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை சென்டிரலில் நேற்று வெடித்த 2 வெடிகுண்டு சம்பவத்தில் ஒரு பெண் பலியாகி உள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர். இது இரக்கமற்ற ஒரு கோழை செயல்.

திருப்பதி, காளகஸ்தி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை குறி வைத்தோ... அல்லது அவர் பேசும் கூட்டத்தில் பதட்டத்தை உருவாக்குவதோ இந்த சம்பவத்தை நடத்தி இருக்கக் கூடும் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம்.

ஆந்திரா எல்லையை அந்த ரெயில் தொடும் சமயத்தில் இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்தை அவர்கள் நிறைவேற்ற இருந்தனர். ஆனால், ரெயில் காலதாமதமாக வந்ததால் சென்னை சென்டிரலில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கௌரவப் பிரச்சினை பார்க்கக் கூடாது. இது இருமாநில சம்பந்தப்பட்ட பிரச்சினை. தேசிய புலனாய்வு குழு விசாரணைக்கு அவர் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியும். இதற்காக நாங்கள் அவரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

டி.ஜி.பி. ராமானுஜம் கூட இந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தை குறி வைத்து நடக்கவில்லை என்று கூறி உள்ளார். நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தால் தேசப்பக்தர்களுக்கு நல்லது நடக்கும். துரோகிகளுக்கு கெடுதல் நடக்கும். அதனால்தான் அவர் பதவி ஏற்கக்கூடாது என இப்படி குண்டு வைக்கிறார்கள்.

ஆனால், மோடி பிரதமர் ஆவது உறுதி. மே 16–ந் தேதிக்கு பிறகு பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாதத்தை மோடி ஒடுக்குவார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி பிடிப்பட்ட தீவிரவாதியுடன் தீவிர விசாரணை நடத்தி இருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் (இரட்டை கோபுரம் தகர்ப்பு) நடந்த பிறகு அந்த நாட்டில் ஆளும் கட்சி எதிர்கட்சி என அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால் அதன் பிறகு இதுபோன்ற சம்பவம் அங்கு நடக்கவில்லை. ஆனால், இங்கோ எந்த சம்பவத்துக்கும் அரசியல் ஆதாயத்தை தேடுகிறார்கள். இது இனிமேலும் இருக்கக் கூடாது. பயங்கரவாதத்தை தீவிரவாதிகளை அழிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டும்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media