BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 2 May 2014

ரெயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கருணாநிதிக்கு உரிமை இல்லை: ஜெயலலிதா


சென்னையில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு குறித்து அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, "முதலமைச்சர் நெருக்கடியான நேரத்திலே கூட தலைநகரிலே இல்லாத காரணத்தால், அந்தத் தீவிரவாதி கைது செய்யப்பட்ட பிறகும், மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாகவும், துல்லியமாகவும் எடுக்கப்படாத காரணத்தால், சென்னை சென்ட்ரல் புகைவண்டி நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது எனக் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை, தனது ஆட்சிக் காலத்தில் அமளிக் காடாக மாற்றிய கருணாநிதி; 1.5.2014 அன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து விவரம் புரியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தீவிரவாதம் தமிழகத்தில் தலைதூக்க விடாமல் இருப்பதில் எனது தலைமையிலான அரசு கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், பல்வேறு நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறையினர் கடந்த 34 மாதங்களாக எடுத்து வருகின்றனர். பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட “போலீஸ்” பக்ருதீனை சென்னையிலும், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரை ஆந்திர மாநிலம் புத்தூரிலும் அடையாளம் கண்டு, அவர்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக காவல் துறை கைது செய்துள்ளது. நான்கு நாட்களுக்கு முன் பாகிஸ்தான் தீவிரவாதி ஜாகீர் உசேனையும் தமிழகக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றவுடன் தமிழக காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.  பின்னர், எனது உத்தரவின் பேரில், இந்த வழக்கு மாநிலக் குற்றப் பிரிவு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த ரயில் குறித்த நேரத்தில் சென்னை வந்தடைந்து, புறப்பட்டுச் சென்று இருக்குமேயானால், காலை 7.15 மணிக்கு ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருக்கும் போது வெடித்திருக்கும்.  இது குறித்தும், மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு எந்த ஓர் அமைப்பும் இதுவரை பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. மாநில குற்றப் புலனாய்வுத் துறையினர் நுண்ணறிவுப் பிரிவினருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்களிடமும், இதர சாட்சிகளிடமும் விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஜாகீர் உசேனிடமும் முழுமையான விசாரணையை காவல் துறையினர் அன்றே மேற்கொண்டனர். இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ஜாகீர் உசேனிடம் தகவல் பெறப்பட்டு இருந்தால், தமிழகக் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பினை தடுத்து இருப்பார்கள். தமிழகக் காவல் துறை முன் எச்சரிக்கையுடன் தான் செயல்பட்டு வருகிறது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதும், முழுமையான விசாரணைகள் நடைபெற்று இருக்குமானால், இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம் கருணாநிதி கூறி இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் பொறுப்பற்ற செயல் ஆகும்.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் 1.5.2014 அன்று அளித்த பேட்டியில், “இந்த ரயில் பெங்களூரிலிருந்து கிளம்பி ஜோலார்பேட்டை தாண்டியவுடன் தமிழ்நாடு எல்லை வந்து விடுகிறது.  எனவே, தமிழ்நாட்டு எல்லைக்குள் எங்கே குண்டு வைக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாடு காவல் துறைக்கு விடுக்கப்பட்டிருக்கின்ற எச்சரிக்கையாகத் தான் இதைக் கருத வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், வெடிக்காத பைப் வெடிகுண்டு ஒன்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

இவர்கள் தெரிவிக்கின்ற கருத்துகளைப் பார்க்கும் போது, தீவிரவாதிகளிடமிருந்து இவர்கள் நிறைய தகவல்களைப் பெற்றுள்ளனரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.  அப்படி அவர்கள் ஏதாவது தகவல்களைப் பெற்றிருந்தால், அவற்றை உடனடியாகத் தமிழகக் காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றை அனுப்ப மத்திய அரசு முன்வந்தது போலவும், அதனை எனது தலைமையிலான அரசு தடுத்துவிட்டது போலவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசின் உள் துறையில் உள்ள ஒரு இடைநிலை அதிகாரி, தமிழக உள் துறை செயலாளரை 1.5.2014 அன்று தொடர்பு கொண்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளோ, வெடிகுண்டினைக் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் குழுவோ தேவைப்பட்டால் அனுப்புவதாகத் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த தமிழக அரசின் உள் துறைச் செயலாளர், ஏதேனும் தேவையிருப்பின், உதவியைக் கோருவதாகக் கூறினார். தேசிய பாதுகாப்புக் குழுவின் வெடிவிபத்து குறித்த வழக்குகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் சம்பவ இடத்தைப் பார்வையிட வந்துள்ளனர்.

தான் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை ஏதும் எடுக்காத கருணாநிதி, இந்த குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார். இந்தக் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட சதிகாரர்களை கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்களுக்குத் தக்க தண்டனை பெற்றுத் தரத் தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media