செவ்வாய்கிழமையன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் காலை 8.30 மணிக்குப் புறப்பட்டு டெல்லி சென்ற ஜெயலலிதாவுக்கு முண்டேவின் மரணம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாணக்கியபுரியின் புதிய தமிழக இல்லத்துக்கு மதியம் 12 மணிக்கு அவர் வந்தார். மதியம் சுமார் இரண்டு மணி வரை முதல்வரின் நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், வெகுதூரத்தில் இருந்து வந்திருப்பதால் தமிழக முதல்வர், ஓமன் நாட்டு அதிபரின் சந்திப்பு களை மட்டும் ரத்து செய்ய வேண்டாம் எனக் மோடி கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்தனர். முண்டேவின் உடல் மகாராஷ் டிராவுக்கு அனுப்பப்பட்ட பிறகு இந்தச் சந்திப்பை வைக்கும்படி பிரதமர் அறிவுறுத்தியதாகவும் அதற்கேற்ப நேரத்தை மட்டும் மாற்றி அமைத்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பிரபல வழக்கறிஞரான ரவிசங்கர் பிரசாத், ஜெயலலிதாவின் வழக்குகளில் அவருக்காக ஆஜரானவர். தற்போது மத்திய சட்டத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுவிட்ட பிரசாத், தமிழக முதல்வரை அவர் தங்கி இருந்த தமிழ்நாடு இல்லத்திலேயே வந்து மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இவரைபோல் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சரான நிர்மலா சீதாராமனும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இவர், தமிழக முதல்வரின் சொந்த ஊரான திருவரங்கத்தைச் சேர்ந்தவர். எனவே நிர்மலாவுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நாளில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை அவருடைய அலுவலகத்திலேயே தமிழக முதல்வர் சந்தித்துள்ளார். கடந்தமுறை ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை ஒருமுறைகூட தமிழக முதல்வர் சந்தித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்துக்கு நிலுவையில் இருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க மாநில நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பும்படியும் அவருடன் கலந்து ஆலோசித்து அவைகளை அமல்படுத்த வழி செய்வதாகவும் முதல்வரிடம் ஜேட்லி உறுதி அளித்துள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. தனது அலுவலகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவை, ஜேட்லி லிப்ட் வரை சென்று வழியனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.