இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டுள்ளார் திமுகவின் தலைவர் மு.கருணாநிதி, அதை மகிழ்ச்சியாக கொண்டாடுவாரா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரது மகிழ்ச்சி பறிபோனது வெறும் தேர்தல் தோல்வியால் என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம், எம்ஜிஆர் உடல்நிலை சரி இல்லாமல் இருந்த போதும், ராஜீவ்காந்தி கொலையை அடுத்து மோசமாக தோற்றபோதுமே கலங்காத கருணாநிதியா இந்த தோல்விகளுக்கு கலங்கப்போகிறார். இல்லை தான் ஆனால் அப்போதெல்லாம் தோற்றுப்போனாலும் கழகம் கட்டுக்குலையாமல் இருந்தது. தற்போது கழகம் கட்டுக்குலைந்து போய் கட்டுபாடற்று கழகமே இல்லாத நிலையாகிவிடுமோ என்ற கவலை இருக்கும் கருணாநிதிக்கு.
பண்ணையார் கால காங்கிரசில் எப்போதும் காங்கிரஸ் பாரம்பரிய குடும்பம் என்று மாவட்டத்துக்கு ஒரு குடும்பம் கோலோச்சும், அந்த குடும்பத்திலிருந்து தான் எப்போதும் மாவட்ட தலைவர்கள் வருவார்கள், எம்.எல்.ஏ வாக இருந்தாலும், எம்பி ஆக இருந்தாலும் சேர்மேன் ஆக இருந்தாலும் எல்லாமே அந்த குடும்பத்திற்கு தான் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டும், தொண்டர்கள் கடைசி வரை தொண்டர்களாகவே இருக்க வேண்டும், ஓட்டு கேட்பதை கூட காரிலிருந்து இறங்காமல் ரோட்டில் நின்றே கேட்டுவிட்டு போய்விடுவார்கள்.
காங்கிரசின் இந்த போக்கு பிடிக்காமல் இருந்த இளைஞர்கள் தான் திமுக தொடங்கப்பட்ட உடன் சாரி சாரியாக இளைஞர்கள் திமுகவினுள் இணைந்து கொண்டனர், இளைஞர்களின் தன்னலமில்லா உழைப்பும் யார் வேண்டுமானாலும் அரசியலில் சாதிக்கலாம், குடும்ப பாரம்பரியம், பணம் தேவையில்லை என்று மாற்றத்தை கொண்டுவந்தது திமுக, ஆனால் இன்று அந்த திமுகவா உள்ளது?
குறுநில மன்னர்களை போல மாவட்டத்துக்கு மாவட்டம் காலம் காலமாக அதே மாவட்ட செயலாளர்கள், அதே மந்திரிகள், மாவட்ட செயலாளர் இறந்து போனால் அவரது மகன் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ போனால் அவரது மகன் எம்.எல்.ஏ, எம்பி போனால் அவரது மகன் எம்பி, மந்திரி போனால் அவரது மகன் மந்திரி என்றிருந்தால் தொண்டர்கள் வெறும் போஸ்டர் ஒட்டவும், பூத் ஏஜெண்ட்டுக்கும் மட்டும் தானா என்ற கேள்வி அனைவரிடம் எழுந்ததால் தான் சொந்த கட்சி காரர்களே கடந்த தேர்தலில் உற்சாகமின்றி வேலை செய்தார்கள், கழகத்தினரே வேட்பாளார்களிடமும் மா.செ.களிடமும் கட்சி வேலை செய்ய காசு கேட்டார்கள்.
தேர்தல் உள்ளடி வேலைகளுக்கு பண்ணையார் காங்கிரஸ் பெயர் போனதென்றால் தற்போது திமுக அதையும் தாண்டி செயல்படுகிறது, திமுகவினர் கூட்டணி கட்சிகளுக்கு தான் முன்பு உள்ளடி வேலை செய்தார்கள், தற்போதோ சொந்த கட்சிக்கே தங்களை தாண்டி யாரும் கட்சியில் வளரக்கூடாது என்று பலவீனமான வேட்பாளர்களை மாவட்ட செயலாளர்கள் நிறுத்த செய்தார்கள், அதையும் தாண்டி யாரும் நின்றால் உள்ளடி வேலைகள் செய்து தோற்கடிக்கின்றார்கள் இதை தட்டி கேட்கவும் கண்டிக்கவும் இயலாத பலவீனமான தலைமையாக கருணாநிதி உள்ளார்.
2ஜி ஊழலால் தான் தோற்றது என்று இந்த தேர்தலுக்கும் கனிமொழி மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் பழி போடுகிறார்கள், 1991-96ல் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு ஊழல் குற்றச்சாட்டுகளால் கடுமையாக பெயர் கெட்டு போயிருந்தது, 96ல் ஜெயலலிதாவே தோற்று போனார் ஆனால் 1998ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது, ஊழல் குற்றச்சாட்டுகள் கட்சியின் பெயரை கெடச்செய்கிறது என்றாலும் கூட கட்சியின் அமைப்பில் ஏற்பட்டுள்ள தொண்டர்களின் நிர்வாகிகளின் சோர்வே மிகப்பெரிய தோல்வியை திமுகவுக்கு தந்துள்ளது.
அதிமுக எதிர்கட்சியாக இருக்கும் போது தலைவி கொடநாட்டிற்கு ரெஸ்ட் எடுக்க போய்விடுவார்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் தங்கள் பிசினசில் பிசியாகிவிடுவார்கள், தொண்டர்கள் கூட ரெஸ்ட் எடுக்க போய்விடுவார்கள், தேர்தல் நெருங்கும் வரை அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்று கேட்கும் அளவுக்கு அமைதியாக இருப்பார்கள், ஆனால் திமுகவினரோ தேர்தலில் தோற்று எதிர்கட்சியாக இருக்கும் போது தான் போராட்டங்கள் நடத்துவது, அறிக்கைகள் அளிப்பது என பிசியாக இருப்பார்கள், ஆனால் 2011ல் திமுக தோற்றபின் மூன்று ஆண்டுகளாக திமுகவினர் எங்கே உள்ளார்கள் என்று தேடும் அளவிற்கு அமைதியாக உள்ளார்கள்.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அமைச்சரை மாற்றுகிறார்கள் என்று திமுகவினர் கேலி பேசுகிறார்கள், ஆனால் பொதுமக்கள் மத்தியிலோ இன்றைக்கு மந்திரி நாளைக்கு எந்திரி யாரும் அம்மா ஆட்சியில் ஆடமுடியாது என்று சொல்லி அதையே பாசிட்டிவாக பார்க்கிறார்கள்.
திமுக இந்த தேர்தலில் வாங்கிய இந்த வாக்கு சதவீதம் கூட திமுகவிற்கு இணையான மாற்று கட்சி என்று எக்கட்சியின் மீதும் மக்களுக்கு இதுவரை பெரிய நம்பிக்கை வராததால் தான் இந்த இரண்டாவது இடம் கூட, அந்தந்த சில மாவட்டங்களில் மட்டும் கொஞ்சம் பலமாக இருக்கும் தேமுதிக, பாமக, பாஜக, மதிமுக போன்ற கட்சிகள் மூன்றாவது அணி என்று இணைந்து வாங்கிய வாக்குகள் திமுகவின் வாக்குகளுக்கு இணையாக வாக்குகள் வாங்கி உள்ளன என்பது திமுக தலைமை கவனிக்க வேண்டியது.
திமுக தலைமை அடியோடு மாநிலம், மாவட்டம், வட்டம், நகரம், கிளைக்கழகம் வரை பழையவர்களுக்கு ஓய்வு கொடுத்து அனுப்பிவிட்டு புரட்டி போட்டால் மட்டுமே தாக்கு பிடிக்க முடியும் இல்லையென்றால் கழகம் காலியாகிவிடும், ஆனால் செய்வாரா கருணாநிதி?
இந்த கட்டுரையை நீங்கள் சரி என்று கருதினால் ஷேர் செய்யுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.